Trump Vs China: ஆட்டம் காட்டும் ட்ரம்ப்.. காட்டம் ஆன சீனா, எச்சரிக்கைக்கு பதில் எச்சரிக்கை...
சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், சீனா பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்ன கூறியிருக்கிறது தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப போட்ட கூடுதல் வரியை எதிர்த்து, சீனாவும் அமெரிக்கா மீது 34% வரியை விதித்தது. இதை பார்த்து டென்ஷனான ட்ரம்ப், சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில், சீனாவும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதிலுக்கு பதில் வரி விதித்துக்கொண்ட அமெரிக்கா - சீனா
அமெரிக்காவின் வரியை விட, மற்ற நாடுகள் அதன் மீது விரிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவீதம் பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசத்திற்கு 37 சதவீதம், வியட்நாமுக்கு 46 சதவீதம், இந்தோனேசியாவிற்கு 32 சதவீதம், தாய்லாந்திற்கு 36 சதவீதம், பாகிஸ்தானுக்கு 29 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதம் என வரி விதிப்பு அறிவித்தார்.
இந்நிலையில், ட்ரம்பின் வரிக்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க இறக்குமதிக்கு 34 சதவீத வரியை விதித்தது. அதோடு நிற்காமல், சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும், சீனாவின் வர்த்தக அமைச்சகம், 11 அமெரிக்க நிறுவனங்களை, நம்பமுடியாத நிறுவனங்க என பட்டியலிட்டு, அந்நிறுவனங்கள் சீனாவிலும், சீன நிறுவனங்களோடும் வர்த்தகம் செய்ய தடை விதித்தது. அத்துடன், சீனாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில அறிய பூமிக் கூறுகளின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த, உரிமம் வழங்கும் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த பூமிக் கூறுகள், மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட் குண்டுகள் தயாரிப்பு வரை பயன்படக்கூடியவை.
இவற்றுடன், அமெரிக்காவின் 5 பெரிய விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சிக்கன் இறக்குமதி செய்வதை நிறுத்து உள்ளதாக சீன சுங்கத்துறை பொது நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல், இவை 5 இல்லாமல், 6-வதாக ஒரு நிறுவனத்திடம் இருந்து அரிசி இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
டென்ஷனான ட்ரம்ப்பின் எச்சரிக்கையும்.. சீன பதிலடியும்
சீனாவின் இந்த பிடிவாதத்தை பார்த்து டென்ஷனான ட்ரம்ப், அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரி அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், 50 சதவீதம் கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என எச்சரித்தார். இது குறித்து பதிவிட்ட அவர், சீனா ஏற்கனவே விதித்துள்ள சட்டவிரோத வரிகளுடன், பழிவாங்கும் நோக்கில் கூடுதலாக 34 சதவீத வரியை விதித்துள்ளதாகவும், ஏப்ரல் 8-ம் தேதிக்குள் வரி அறிவிப்பை சீனா திரும்பப் பெறாவிட்டால், ஏப்ரல் 9-ம் தேதி, அதாவது நாளை சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கும் என்றும், சீனாவுடன் அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த பதிவையடுத்து, அதற்கு பயப்படாத சீனா, பதிலுக்கு டென்ஷனாகியுள்ளது. அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாக கூறியுள்ள சீனா, ட்ரம்ப் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தால், சீனாவும் பதிலுக்கு கூடுதலாக வரிகளை விதிக்கும் என எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், தங்களது உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க போராடும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.





















