எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான நோயாக கொரோனா தொற்று மாறலாம்! - ஆய்வில் தகவல்..!
எதிர்வரும் காலங்களில் கோவிட் தொற்று சாதாரண காய்ச்சலைப்போல, தற்போது தடுப்பூசி போடப்படாத குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா, நார்வே நாட்டின் ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் கோவிட் தொற்று சாதாரண காய்ச்சலைப் போல, தற்போது தடுப்பூசி போடப்படாத குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா - நார்வே நாட்டின் ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆட்டர் ப்யார்ன்ஸ்டாட், கோவிட் தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் புதிய நோய்களும், குறைந்த வயது மரணங்களும் அதிகளவில் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். “எங்கள் ஆய்வுகளின் வழியாக எதிர்காலத்தில் குழந்தைகளைக் கோவிட் தொற்று அதிகளவில் தாக்கும் வாய்ப்பிருக்கிறது. பெரியவர்கள் தடுப்பூசி மூலமாகவோ, வைரஸ் தாக்குதல் மூலமாகவோ நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுவிடும் சாத்தியங்கள் இருக்கின்றன” என்றார் ஆட்டர்.
Science Advances என்ற ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகள், ப்ளூ காய்ச்சல்களும் இப்படியான உலகளாவிய நோய்களாக உருவாகி, தற்போதைய சாதாரண இடத்தை அடைந்திருப்பதைக் குறிப்பிடுகின்றது. “சுவாசம் தொடர்பான நோய்கள் தொடக்க காலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை, வயது வாரியாகத் தாக்கி வெவ்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கின்றன” என்று ஆட்டர் இதுகுறித்து கூறுகிறார்.
இதற்கு உதாரணமாக அவர் 1889 முதல் 1890 வரை ஏற்பட்ட ரஷ்யன் ப்ளூ என்ற உலகளாவிய தொற்று நோயைக் குறிப்பிடுகிறார். HCoV-OC43 என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் உருவான போது, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைத் தாக்கி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் சுமார் 10 லட்சம் பேர் அந்த வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தனர். ஆனால் தற்போது அதே வைரஸ் 7 முதல் 12 மாதங்கள் வரை வயதுகொண்ட குழந்தைகளைத் தாக்கும் சிறிய காய்ச்சலாக இருக்கிறது என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆட்டர் இந்த ஆய்வில் பெரியவர்களுக்கு கோவிட் தொற்றை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தால், அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும், ஏற்கனவே நோய் வந்தவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கும் எனவும் கூறுகிறார். கோவிட் தொற்றில் இருந்து தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்றும், விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வை உருவாக்கிய குழு, மக்கள் வாழும் நிலப்பரப்பு, மக்கள் தொகை, மக்கள் தங்களுக்குள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகளின் தன்மை, நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றிற்கு இடையிலான கால இடைவெளி முதலானவற்றைக் கொண்டு எதிர்காலத்தில் வயதுவாரியாகக் கோவிட் தொற்றையும், இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.
இந்த ஆய்வுக்குழு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கோவிட் தொற்று குறித்த எண்ணிக்கையைப் பயன்படுத்தியுள்ளன. மேலும், சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் முதலான நாடுகளின் மக்கள்தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.
நிரந்தரமாக அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேல் தற்போது இருக்கும் நிலை நீடித்தால், வயது குறைந்தவர்கள் மீதான தொற்று விகிதம் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனினும், கோவிட் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாக மாறும்போது தான் இந்த ஆய்வின் முழுமை நிறைவுபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. கோவிட் ஏற்படுத்தும் பாதிப்புகளால் பெரிய நோய்கள் எதுவும் ஏற்படாத வரை, இறப்பு விகிதம் ஒரே விதமாக இருக்கும் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.