Child Labour Day 2022: என்று தணியும் இந்த அவலம்...உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று...!
இன்றைய குழந்தைகள் தான் நாளை நாட்டின் உயர் பதவிகளில் அமரப்போகிறவர்கள்.
உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை போன்ற இன்னல்களில் அதிக அளவில் பாதிக்கக்கூடியவர்களாகக் குழந்தைகள்தான். இளமைப் பருவம், ஆற்றல் மற்றும் சுய கௌரவத்தை இழந்து, கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர்களின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என குழந்தை தொழிலாளர் முறை வரையறுக்கப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இணைந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை உருவாக்கியது. குழந்தை தொழிலாளர்களின் கல்வி, மருத்துவம், மற்றும் பிற தேவைகளுக்கான தகுந்த ஏற்பாடுகளை செய்து அவர்களின் இளமை பருவத்தை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது. கடந்த காலங்களைவிட சமீபகாலமாக குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின் இதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கவலையளிக்கும் புள்ளி விபரங்கள் கூறுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் படி 5 முதல் 17 வயது வரையிலான சுமார் 160 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளதாகவும், இதில் 72 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் ஆப்பிரிக்காவில் இருப்பதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்களை முற்றாக ஒழித்துவிட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் அது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக வேலைக்கு அனுப்புவது, குழந்தை கடத்தல் போன்றவற்றால் குழந்தை தொழிலாளர்கள் உருவாவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் ஒரு தீம் அடிப்படையில் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு "குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு" என்ற அடிப்படையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர் பிரச்சனைக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என நாம் நினைத்தாலும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சன உண்மை. இன்றைய குழந்தைகள் தான் நாளை நாட்டின் உயர் பதவிகளில் அமரப்போகிறவர்கள் என்பதாலும், இன்றைய நடப்பு தான் நாளை எதிரொளிப்பாக மாறும் என்பதாலும் விரைவில் இந்த பிரச்சனைக்கு உங்களால், என்னால்,நம்மால் ஒரு தீர்வு கிடைக்கட்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்