’19 வருடத்துக்கு அப்புறம்....’ - ஒரே விமானத்தை ஓட்டும் அப்பா-மகள் இணை: வைரல் போட்டோ!
தற்போது 23 வயதாகும் லிசா தனது அப்பாவைப் போலவே தானும் விமான ஓட்டி சீருடை அணிந்து விமானத்தில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
’என்னை போலவே என் பிள்ளையும் டாக்டரா வரனும்’ என ஆசைப்படும் பெற்றோர்கள் இங்கு உண்டு. இதன் எதிர்மறை விளைவுகள் ஒருபக்கம் இருந்தாலும். தன் அப்பா/அம்மாவைப் போலவே டாக்டராக வேண்டும் எனக் கனவு கண்டு அதில் வெற்றிபெரும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அந்த வெற்றி கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியது. இப்படியான அளப்பரிய மகிழ்ச்சியை அடைந்திருக்கின்றனர் நெதர்லாந்து நாட்டின் அப்பா-மகள் இருவரும்.
நெதர்லாந்து நாட்டின் ஹாக்ஸ்பெர்கன் பகுதியைச் சேர்ந்தவர் பார்ட் வுட்மேன். இவர் அந்த நாட்டின் கே.எல்.எம் விமான சேவை நிறுவனத்தில் விமான ஓட்டியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லிசா வுட்மேன் என்கிற மகள் உள்ளார். தற்போது 23 வயதாகும் லிசா தனது அப்பாவைப் போலவே தானும் விமான ஓட்டி சீருடை அணிந்து விமானத்தில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
புகைப்படத்தின் பின்னணி என்ன?
2001ல் லிசா சிறுமியாக இருந்த போது அப்பா விமான ஓட்ட அவர் அருகில் இவரும் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்துள்ளனர். 19 வருடங்களுக்குப் பிறகு லிசா விமான ஓட்டிப் பயிற்சி முடித்த பின் இரண்டாவது விமான ஓட்டியாகத் தனது அப்பாவுடன் அதே விமானத்தில் அதே இடத்தில் அமர்ந்தபடி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். 19 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தில், லிசா சிரித்தப்படி இருக்க...விமான ஓட்டி இருக்கையில் பூரிப்புடன் அமர்ந்திருக்கிறார் பார்ட் வுட்மேன். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் அவளது கனவு நிறைவேறும்போது அத்தகையதொரு பூரிப்பு வாய்க்கும்!