Trump Vs Canada PM: “இனி உங்கள நம்ப முடியாது“; ட்ரம்ப்புக்கு எதிராக கனடா பிரதமர் மார்க் கார்னே எடுத்த அதிரடி முடிவு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டும், அவர் இறங்கி வராததால், இனி அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளார் கனடா பிரதமர் மார்க் கார்னே. அதனால் என்ன செய்யப்போகிறார்.?

கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தில் ஒளிபரப்பான அமெரிக்க வரி தொடர்பான விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டு, அதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபமடைந்தார். இந்த சம்பவத்திற்கு சமீபத்தில் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர் மார்க் கார்னே. ஆனாலும், கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் மறுத்துவிட்டார். இதனால், மார்க் கார்னே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
“அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும்“
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக, கனடா வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்தைகளையும் நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் கனடா பிரமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
உலகின் பிற நாடுகளுடனான புதிய உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், உலகப் பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும், வேகமாக வளர்ந்துவரும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் தங்களது உறவை வலுப்படுத்துவதை விட சிறந்த இடம் வேறு இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதற்கு உதாரணமாக, இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்தை மற்றும் சீனா உடனான உறவில் நிகழ்ந்த திருப்புமுனை ஆகியவற்றை கூறலாம் என தெரிவித்தார்.
மேலும், இந்தியா உடனான உறவில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்றும், பிரதமர் மோடியை தான் சந்தித்ததில்லை என்றாலும், தங்கள் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மினவும் அவசியம் என தெரிவித்த அவர், அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கும் தன்மையை மாற்ற வேண்டும், அது ஒரே இரவில் நடக்காது என தெரியும், ஆனால், மின விரைவாக தாங்கள் முன்னேறி வருவதாகக் கூறினார் மார்க் கார்னே.
கனடாவில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய விளம்பரம் என்ன.?
கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்டோரியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்டு, அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த தொலைக்காட்சி விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், 1987-ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளிலிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, இதற்கு ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த மோசடியின் ஒரே நோக்கம், அமெரிக்காவை காயப்படுத்துவதுதான் என தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10% அதிகமாக உயர்த்துகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்றபோது, அங்கு நடந்த விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட மார்க் கார்னே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் கோபம் குறையாத ட்ரம்ப், கனடா உடன் இனி வர்த்தகப் பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்துள்ளார்.





















