Britney Spears: ''கரு கலைந்துவிட்டது.. இது துயரமான காலம்..'' உருக்கமாக பதிவிட்ட பிரிட்னி ஸ்பியர்ஸ்!!
பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) கர்ப்பம் கலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பாப் இளவரசி என்று அன்புடன் அழைக்கப்படும் பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தன் கர்ப்பம் கலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்னி ஸ்பியர்ஸ் தன் குழந்தை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் இணையர் சாம் அஸ்காரி(Sam Asghari) உடன் இணைந்து ,“ எங்களின் குழந்தையை இழந்துவிட்டோம் என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். என் கர்ப்பகாலத்தின் ஆரம்பத்திலேயே என் குழந்தையை இழந்தது வருத்தமளிக்கிறது. எல்லா பெற்றோர்களுக்கும் இந்த இக்காலம் என்பது துயர் மிகுந்தது. நாங்கள் இச்செய்தியை கொஞ்சம் நாட்களுக்கு பிறகு உங்களிடம் பகிர்ந்திருக்கலாம். எங்களின் மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளவே பெரும் ஆர்வர்முடன் இருந்தோம். எங்கள் ஒவ்வொருவர் மீதான அன்பே எங்களின் பலம். இனி வரும் காலங்களில் எங்களின் அழகான குடும்பத்தை உருவாக்க முயற்சிப்போம்.” என்று வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
பிரிட்னி ஸ்பியர்ஸ் சாம் அஸ்காரியுடன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தையின் வருகைக்காக காத்திருப்பதாகவும் இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
பிரிட்னி ஸ்பியர்ஸ் 2007-ல் தன் முன்னாள் கணவர் கெவின் ஃபெடர்லைனிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இதையெடுத்து, மனநலம் ஆரோக்கியமின்றி காணப்பட்டார். தன் இரண்டு குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவர் இழந்தார்.
கலிஃபோர்னியா அரசின் சட்டத்தின்படி, ஒரு தனிநபர் மனநலம் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது, நீதிமன்றம் தலையிட்டு அவரின் வாழ்க்கை முடிவுகள் குறித்து முடிவெடுக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரை பரிந்துரைக்கும். அதாவது அவரின் தனிப்பட்ட தேவைகளான உடல் ஆரோக்கியம், உணவு, உடை அல்லது தங்குமிடம் மற்றும் பொருளாதார தேவைகளான சொந்த நிதி ஆதாரங்களை நிர்வகிக்க, கன்சர்வேட்டர்ஷிப் எனும் பாதுகாவலரை நியமிக்கும்.
அதன்படி, 2008 ஆம் ஆண்டு முதல், பிரிட்னி ஸ்பியர்ஸின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கன்சர்வேட்டர்ஷிப்பில் இருந்தார். 13 ஆண்டுகள் நீடித்த அவரது கன்சர்வேட்டர்ஷிப்பின் போது பிரிட்னி குழந்தை பெற்றுக்கொள்ள அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும்,இந்த கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்று பிரிட்னி ஸ்பியர்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பிரிட்னி-சாம் தம்பதியருக்குப் பிறக்கவிருக்கும் முதல் குழந்தை என்ற நிலையில், தற்போது கரு கலைந்திருப்பது அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.