மதியம் சாப்பிட போனதால டிஸ்மிஸ் செய்த கம்பெனி.. 12 லட்சம் இழப்பீடு பெற்ற பெண் பணியாளர்..!
தன்னை அநியாயமாக பணிநீக்கம் செய்த நிறுவனத்திடம் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் பெண் பணியாளர் போராடி பெற்றுள்ளார்.
தலைவலி இல்லாமல் நிம்மதியுடன் வேலை செய்ய வழிவகுக்கும் பணியிடம், நட்புணர்வுடன் பழகும் சக பணியாளர்கள், புரிந்துணர்வுடன் வேலை வாங்கும் உயர் அலுவலர்கள் இவற்றையெல்லாம் பெறுபவர்கள், இன்றைய ஓய்வில்லாத உலகில் பெரும் அதிர்ஷ்டசாலிகள். எனினும் தற்போதைய கார்ப்பரேட் உலகில் நம் சக்திக்கு அப்பாற்பட்ட சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளால் பலரும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியே வருகிறது.
மதிய உணவு இடைவேளை:
அந்த வகையில், பணி நேரத்தில் மதிய உணவு இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான பெண் ஒருவர் தன் வேலையை இழக்க நேரிட்ட சம்பவம் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்து அதிர்ச்சியையும், இந்த சமூகம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது எனும் கவலையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன்னை அநியாயமாக காரணத்துடன் பணிநீக்கம் செய்த தன் முதலாளியிடமிருந்து சுமார் 11,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 12 லட்ச ரூபாய்) வரை அப்பெண் இழப்பீடு பெற்று, தனக்காக வருந்திய நபர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளார்.
விசுவாசமற்ற செயல்:
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லி எனும் இடத்தில் உள்ள லீன் எஜுகேஷன் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் டிரேசி ஷேர்வுட். இப்பெண் 2018ஆம் ஆண்டு இரண்டு சக ஊழியர்களுடன் உணவருந்தச் சென்றுள்ளார்.
அந்த சமயம் அந்நிறுவனம் பல நெருக்கடிகளில் சிக்கியிருந்த நிலையில், டிரேசி மதிய உணவு இடைவெளி எடுத்துக் கொண்டது விசுவாசமற்ற செயல் என்றும், டிரேசி அர்ப்பணிப்புடன் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும் கூறி அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேக்சின் ஜோன்ஸ் அவரை வேலை நீக்கம் செய்துள்ளார்.
பணிநீக்கம்:
மேலும், ‘மோசமான நடத்தை’ ‘மிகுந்த அலட்சியம்’ ஆகியவற்றுடன் தப்பு தப்பாக வேலை செய்ததாகவும் குறிப்பிட்டு ட்ரேசியை பணி நீக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து மதிய உணவுக்காக சென்றதற்காக நியாயமற்ற முறையில் தன்னை பணிநீக்கம் செய்த தனது முன்னாள் முதலாளிகள் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில் அநியாயமான காரணங்களைக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட ட்ரேசிக்கு சுமார் 11 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு அவரது முன்னாள் நிறுவனத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 இந்நிலையில், 4 ஆண்டுகள் சளைக்காமல் போராடி நீதி பெற்றுள்ள ட்ரேசிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முந்தைய சம்பவம்
முன்னதாக இதேபோல் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபரின் வித்தியாசமான செயல் இணையத்தில் வைரலானது.
உலகின் நம்பர் 1 பணக்காரரும் பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது முதல், ட்விட்டரில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் பலரும் விரக்தியில் விளிம்புக்குச் சென்றனர். இந்நிலையில், இவர்களில் இருந்து மாறுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் முன்னதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பகிர்ந்த பதிவு பாராட்டுகளைப் பெற்றது.
25 வயது யாஷ் அகர்வால் எனும் நபர் பகிர்ந்த பதிவில், “இப்போதுதான் ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். இந்த குழுவில் ஒரு அங்கமாக இருந்தது எனக்கு மிகப்பெரும் பாக்கியம், பெரும் மரியாதை. நீங்கள் பணியாற்றிய இடத்தைக் காதலியுங்கள்” எனக்கூறி ட்விட்டர் அலுவகலத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்திருந்தார்.
யாஷின் இந்த ட்வீட் சில மணிநேரங்களிலேயே லைக்ஸ் அள்ளி, அவரது நேர்மறையான கண்ணோட்டமும் பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.