பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை.. கனடாவில் நடைபெற்ற காலநிலை உச்ச மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்..!
இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐநா பல்லுயிர் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை, கனடா நாட்டின் மாண்ட்ரியால் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐநா பல்லுயிர் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நான்கு உயரிய நோக்கங்களையும், இருபத்து மூன்று இலக்குகளையும் ஏற்றுக்கொண்டுள்ளன.
2030க்குள், புவியின் மொத்த பரப்பில் 30 விழுக்காடு நிலம், கடல்கள், கடற்கரைகள், உள்நாட்டு நீர்நிலைகள் போன்றவற்றைப் பாதுகாப்பது, தீங்குவிளைவிக்கும் திட்டங்களுக்கான 500 பில்லியன் டாலர் அரசு மானியங்களைக் குறைப்பது மற்றும் உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பது போன்றவற்றை எட்டுவது இந்த உடன்படிக்கையின் முக்கியமான அம்சங்களாகும்.
இரண்டு வாரங்கள் நடைபெற்ற மாநாட்டின் இறுதியில் எட்டப்பட்ட இந்தத் தீர்மானங்கள், அபாயகரமான உயிர்ப்பன்மைய வீழ்ச்சியைக் கையாள்வதிலும் இயற்கை சூழலை மீட்டெடுப்பதிலும் முக்கியமானது என மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகளில் முக்கியமான அம்சங்கள்:
- புவியின் 30 விழுக்காடு சூழல் மண்டலத்தை குறிப்பாக உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க இடங்களை திறனுடன் பாதுகாப்பது.
- அதிக சூழல் பன்மைத்துவமும் முக்கியத்துவமும்மிக்க இடங்களுக்கு ஏற்படும் சேதத்தை சுழியமாக்குவது (near zero loss).
- அதிகப்படியான (செயற்கை) ஊட்டச்சத்துக்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அபாயகரமான வேதிப்பொருட்களால் ஏற்படும் தீங்குகளையும் பாதியாகக் குறைப்பது
- உயிர்ப்பன்மையத்தை அழிக்கும் திட்டங்களுக்கான 500 டாலர் மானியத்தை 2030 க்குள் குறைத்து உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளுக்கு செலவிடுவது.
- தனியார் மற்றும் அரசு நிதியாதாரங்களின்மூலம் 2030 க்குள் இருநூறு பில்லியன் டாலர்கள் நிதியை உலகளாவிய உயிர்ப்பன்மையத்துக்காகத் திரட்டுவது
- வளரும் நாடுகளுக்கு குறிப்பாக பின்தங்கிய நாடுகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை வளர்ந்த நாடுகள், ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களும் தொடர்ந்து 2030 வரையில் 30 பில்லியன் டாலர்களும் நிதி வழங்குவது
- தீவுகளிலும் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அயல்விலங்குகள் (Alien species) அறிமுகமாவதைக் கட்டுப்படுத்துதல்
- பல்லுயிர் பெருக்கத்தின் மீதான அபாயங்கள், பிணைப்புகள் மற்றும் தாக்கங்களை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் மற்றும் வெளிப்படையாக அவற்றை வெளிப்படுத்தவும் தேவையான உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றை GBF அறிக்கை முதன்மைப்படுத்துகிறது.
- சராசரியாக, கடந்த ஒருகோடி ஆண்டுகளில் நிகழ்ந்ததைவிட, பத்து முதல் நூறு மடங்கு அதிகமாக ‘உயிரினங்கள் அற்றுப்போதல்’ தற்காலத்தில் நடந்துவரும் நிலையில் மேற்கண்ட குறிக்கோள்களை எட்டமுடியாதுபோனால் உலகளவில் உயிரினங்களின் அற்றுப்போதலின் வேகம் இன்னும் அதிக தீவிரமாக அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2050 க்குள், எல்லா இயற்கை சூழல் மண்டலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு, மீட்கப்படுவதோடு, பாதுகாக்கப்பட்ட இயற்கை சூழலுடன்கூடிய பரப்பளவை கணிசமாக அதிகரித்தல், உயிரினங்கள் அற்றுப்போகும் அபாயத்தை 10 மடங்கு குறைத்து, இயலுயிர்களின் பெருக்கத்தை அதிகரித்தல், காட்டு - வீட்டு விலங்குகளின் மரபணுப் பன்மையத்தைக் காத்தல் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.