"மோடியின் போர் வெறி.. ரத்த ஆறு ஓடும்" இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பிலாவல் பூட்டோ
தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியாவை கண்டித்து பேசிய அவர், "மோடியின் போர் வெறியையோ அல்லது சிந்து நதி நீரை பாகிஸ்தானிடமிருந்து பறிப்பதற்கான எந்தவொரு முயற்சியையோ பாகிஸ்தான் மக்கள் ஏற்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ. தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும் என பிலாவல் பூட்டோ கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் வெளியுறவு அமைச்சர்:
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி எல்லையை மூடியது. இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதித்தது.
குறிப்பாக, பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டபோது கூட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேற்கில் அமைந்துள்ள மூன்று ஆறுகளின் - சிந்து, ஜீலம் மற்றும் செனாப் - 80 சதவிகித தண்ணீர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.
பாகிஸ்தானின் 80 சதவிகித விவசாயம் இந்த தண்ணீரை நம்பிதான் உள்ளது. அதேபோல, அந்த நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நீர் மின் உற்பத்தி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைதான் நம்பி உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், தண்ணீரை நிறுத்துவது போர் செயலாக கருதுகிறோம் என அறிவித்தது.
"ரத்த ஆறு ஓடும்"
இந்த நிலையில், தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சிந்து மாகாணத்தில் உள்ள சுக்கூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, "சிந்து நதி எங்களுடையது. அது எப்போதும் எங்களுடையதுதான். ஒன்று நமது நீர் அங்கு பாயும், அல்லது அவர்களின் ரத்தம் பாயும்.
சிந்து மாகாணத்தின் வழியாகத்தான் சிந்து நதி பாய்கிறது. சிந்து சமவெளி நாகரிக நகரமான மொஹென்ஜோ-டாரோ அதன் கரைகளில்தான் செழித்து வளர்ந்தது. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தின் வாரிசு என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால், அந்த நாகரிகம் லர்கானாவில் உள்ள மொஹெஞ்சதாரோவில் உள்ளது. நாங்கள் அதன் உண்மையான பாதுகாவலர்கள். நாங்கள் அதைப் பாதுகாத்து வருகிறோம்.
"மோடியின் போர் வெறி"
சிந்து மற்றும் சிந்து நதி மக்களுக்கு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்பை மோடியால் துண்டிக்க முடியாது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானின் நீர்நிலைகளில் தனது கண்களை வைத்துள்ளது. எனவே, நான்கு மாகாணங்களும் ஒற்றுமையாக இருந்து இதை எதிர்க்க வேண்டும். அப்படி செய்தால்தான் நமது நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்.
மோடியின் போர் வெறியையோ அல்லது சிந்து நதி நீரை பாகிஸ்தானிடமிருந்து பறிப்பதற்கான எந்தவொரு முயற்சியையோ பாகிஸ்தான் மக்களோ அல்லது சர்வதேச சமூகமோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பாகிஸ்தானியர்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதால், இந்தியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானும் அதன் மக்களும் கண்டிக்கின்றோம்" என்றார்.





















