பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து: பெண் நீதிபதி பதவி நீக்கம்!
பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின் போது சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த பெண் நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின் போது சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த பெண் நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு தீர்ப்பாயத்தில் 7வது அமர்வு. இதன் நீதிபதி பேகம் மொசாமத் கம்ருனாஹர் நஹர். இந்த தீர்ப்பாயத்தின் முன் கடந்த 2017 ஆம் ஆண்டு, 5 இளைஞர்கள் சேர்ந்த 2 மாணவிகளை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பெண் நீதிபதி, பேகம் மொசாமத் கம்ருனாஹர் நஹர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் சந்தேகத்தின் பலனை அளித்து ஆதாரம் இல்லாததையும் சுட்டிக்காட்டி விடுவித்தார்.
அப்போது அவர், "இந்த வழக்கைப் பதிவு செய்த காவலர்கள் பொது மக்களின் நேரத்தை வீணடித்துவிட்டார்கள். எந்த ஒரு பலாத்கார வழக்கும் சம்பவம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் பதிவு செய்யப்படக் கூடாது. அந்தப் பெண்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மனம் ஒத்தே உறவு கொண்டுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், உச்ச நீதிமன்றம் பெண் நீதிபதி பேகம் மொசாமத் கம்ருனாஹர் நஹரை நீதிபதி பதவியிலிருந்தே விடுவிப்பதாக அறிவித்தது.
மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வங்கதேச சட்ட அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. இனி அந்த நீதிபதி நீதிமன்றத்தில் பணியாற்ற முடியாது என்றும் மாறாக சட்ட அமைச்சகத்தின் நீதித் துறையில் ஏதாவது ஒரு பணியில் மட்டுமே தொடர்வார் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறியதாவது:
நீதிபதியின் இந்தக் கருத்து நீதிமன்றத்தின் மாண்பினையே சிதைப்பதாக உள்ளது. அதனாலேயே நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெண் நீதிபதி நீக்கப்பட்டது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும். மேலும், பெண் நீதிபதிக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏன் அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தார் என்பதைக் கூற வேண்டும். பாலியல் பலாத்காரம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் அந்த வழக்கை போலீஸார் பதிவு செய்யக்கூடாது எனக் கூறுவது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண் நீதிபதியின் தீர்ப்புக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தக் கொடூர சம்பவத்துக்கு போதிய ஆதாரம் இருந்தும் எதன் அடிப்படையில் அந்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுவித்தார் என விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விளாசத் தொடங்கியுள்ளன.