China Warns America: 155% வரி; “பேச்சுவார்த்தை நடத்தி ‘தப்ப‘ திருத்திடுங்க, இல்லைன்னா..“; அமெரிக்காவை எச்சரித்த சீனா
சீனாவிற்கு 155 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டியுள்ள நிலையில், தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா தவறை திருத்தாவிட்டால், தக்க பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.

சீனா, அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய நிலையில், அந்நாட்டிற்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து சீனாவிற்கான மொத்த வரி 155 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த தவறை சரிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் வர்த்தக பிரச்னைகளை அமெரிக்கா தீர்க்காவிட்டால், சீனா தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவை எச்சரித்த சீனா
சீன இறக்குமதிகள் மீது 155 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தனது "தவறை" சரிசெய்து பேச்சுவார்த்தை மூலம் வர்த்தகப் பிரச்னையைத் தீர்க்குமாறு அமெரிக்காவை சீனா எச்சரித்தது. அமெரிக்கா இதற்கு ஒத்துவரவில்லை என்றால், சீனா தகுந்த முறையில் பதிலளிக்கும் என்று கொல்கத்தாவில் உள்ள சீன மக்கள் குடியரசின் துணைத் தூதர் சூ வெய் கூறியுள்ளார்.
இந்த வர்த்தகப் போரில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றும் இந்த மோதலை சீனா விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம் என எச்சரித்த அவர், தேவைப்பட்டால் நாங்கள் போராடுவோம் என்றும் கூறியுள்ளார்.
“பேச்சுவார்த்தைக்கு எங்கள் கதவு திறந்திருக்கும்“
பேச்சுவார்த்தை மேசைக்கு அமெரிக்காவை அழைத்துள்ள அவர், "அமெரிக்கா பேச விரும்பினால் எங்கள் கதவுகள் திறந்திருக்கும். எனவே ஒத்துழைப்பு இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று நாங்கள் அமெரிக்க அரசாங்கத்திடம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம். மோதல் அனைவரையும் பாதிக்கிறது" என்று சூ வெய் தெரிவித்துள்ளார்.
"இந்தத் தவறை சரிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்படிச் செய்யாவிட்டால், சீனா தமது உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்," என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
155% வரி விதிக்கப்படும் என எச்சரித்த ட்ரம்ப்
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155 சதவீதம் வரை அதிக வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கடந்த வாரம் சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், பெய்ஜிங் வாஷிங்டனை "மிகவும் மரியாதையுடன்" நடத்தி வருவதாகவும், அமெரிக்காவிற்கு தங்கள் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 55 சதவீத வரிகளின் பின்னணியில் அவர்கள் "மிகப்பெரிய தொகையை" செலுத்துவதாகவும் கூறினார்.
அமெரிக்காவை நிறைய நாடுகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும், ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் தான், தற்போது சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் எதிர்வினை என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





















