US Reservation: இடஒதுக்கீடு ரத்து...உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அதிபர் ஒபாமா..!
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி மாணவர் சேர்க்கை, அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் இடஒதுக்கீடு:
எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வி நிலையங்களில் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை. ஆனால், சமூக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரலும் தொடரத்தான் செய்கிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் நிறத்தின் ரீதியாக இனத்தின் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் இடஒதுக்கீட்டு முறையை குடியரசு கட்சி எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி மாணவர் சேர்க்கை, அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்திற்கு எதிராக இருப்பதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
பழமைவாதிகள் பெரும்பான்மையாக இருக்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதிகள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட குடியரசு கட்சியினர், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இடஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஜனநாயக கட்சி, தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த தீர்ப்பால் மனம் உடைந்திருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இனத்தை கடந்து அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வாய்ப்பளிப்பதில் இடஒதுக்கீடு கொள்கை அவசியம். பாரபட்சமற்ற சமூகத்திற்கான முழுமையான பதிலாக இடஒதுக்கீடு இருந்ததில்லை. ஆனால், அமெரிக்காவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் இருந்து பல தலைமுறையாக திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பை அளித்து, அவர்களும் தகுதியானவர்கள் என்பதை காட்டியது இடஒதுக்கீடு முறைதான்.
ஒபாமாவின் கருத்து என்ன?
நான், என் மனைவி உள்பட பல தலைமுறை மாணவர்கள், எங்கிருக்க வேண்டும் என்பதை நிருபிக்க அனுமதித்தது இடஒதுக்கீடு முறைதான். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடுத்து, நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நேரம் இது" என குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புடன் முழுமையுடன் வேறுபடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசுகையில், "அமெரிக்காவில் இன்னும் பாகுபாடு உள்ளது. கல்லூரிகள் இன ரீதியாக வேறுபடும்போது வலிமையாகிறது என்று நான் நம்புகிறேன். இந்த தேசத்தில் உள்ள திறமைகளை முழு வீச்சில் நாம் பயன்படுத்தி வருவதால் நமது தேசம் வலிமையானது" என்றார்.