Taliban Warning: 'எதற்கெடுத்தாலும் பழிபோட வேண்டாம்..' - பாகிஸ்தானை எச்சரித்த தலிபான்கள்..!
பாகிஸ்தானின் மசூதியில் கடந்த 30ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மசூதியில் கடந்த 30 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்த சம்பவத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில் அதற்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் எச்சரிக்கை:
இது குறித்து தலிபான் வெளியுறவு அமைச்சர் அமிர் முட்டாக்கி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நடந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டுமே தவிர எதற்கெடுத்தாலும் பழி போடக்கூடாது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தின் மையமென்றால் நிச்சயமாக அது சீனா, மத்திய ஆசிய நாடுகள், ஈரான் வரை ஆதிக்கம் செலுத்தியிருக்குமே. உண்மையை ஆராய்வதைவிடுத்து எங்கள் மீது பழி போடுவதன் மூலம் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே வீண் விரோதத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார். காபூலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
100 பேர் உயிரிழப்பு:
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் ஜனவரி 30ஆம் தேதி மதியம் தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.
மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 221 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குண்டுவெடிப்பு நடத்தியதை தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.க்ஷ
கண்டனம்:
குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கருதப்படும் தற்கொலைப் படை தீவிரவாதியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் மீட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற தாலிபான் அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. இதனையடுத்தே தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமிர் முட்டாகி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021 ஆகஸ்டில் வெளியேறின. அதன் பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சியே நடந்து வருகிறது. பழமைவாதம், அடிப்படைவாதத்தில் இருந்து சற்றும் விடுபடாமல் அவர்கள் ஆட்சி நடத்துவதால் தொடர்ந்து அங்கு பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. பெண் உரிமை பாதிப்பு, கல்விக்கு தடை, தொழில்நுட்பங்களுக்கு தடை, இசை, சினிமா, கேளிக்கை, விளையாட்டுக்கு தடை என அந்நாடு அன்றாடம் அவஸ்தைகளை சந்தித்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் அவஸ்தைகளை அறியாமல் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை செலுத்துவதால் அங்கு மனிதாபிமான பேரிடர் ஏற்பட்டுள்ளது.