Abu Dhabi Blast: அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் - 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி
அபுதாபி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ளது அபுதாபி. இந்த நிலையில், அபுதாபி விமான நிலையத்திலும், அபுதாபியின் முசாபா பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனமான ஏ.டி.என்.ஓ.சி. சேமிப்புகிடங்கிலும் அடுத்தடுத்து ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விரவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. திடீரென்று நடைபெற்ற இந்த ட்ரோன் தாக்குதலினால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அங்குமிங்கும் ஓடினர். முசாபா பகுதியில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 3 ஆயில் டேங்கர்கள் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக அந்த நாட்டு காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குணடு வெடிப்பு நடைபெற்ற இரு இடங்களிலும் சிறிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகள் ட்ரோன்களாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த இருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Update: Smoke seen in #AbuDhabi following suspected #Houthi drone attack on three oil tankers. pic.twitter.com/IS44EJAGeU
— Al Bawaba News (@AlBawabaEnglish) January 17, 2022
இந்த ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதுதொடர்பாக, விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் ஐக்கிய அரபு அமீரகத்தை உள்ளடக்கிய சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்கள் சவுதி அரேபியா மீது அடிக்கடி வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் அமைப்புகள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இதேபோன்ற இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அபுதாபி மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி வான்வழியாக தாக்குதல் நடத்தி வருவதால், அபுதாபி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அபுதாபியில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்