Tesla Baby | `உலகின் முதல் டெஸ்லா பேபி’ - அமெரிக்காவில் டெஸ்லா காரில் பிறந்த குழந்தை!
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த இந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் டெஸ்லா கார், ஆட்டோ பைலட் மோடில் செயல்படும் போது, காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணித்த போது குழந்தை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் டெஸ்லா காரில் பயணிக்கும் போது குழந்தை ஈன்றுள்ளார். அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த இந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் டெஸ்லா கார், ஆட்டோ பைலட் மோடில் செயல்படும் போது, காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணித்த போது குழந்தை பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 9 அன்று, அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியில் பிறந்த இந்தக் குழந்தை `உலகின் முதல் டெஸ்லா பேபி’ என்று அழைக்கப்படுகிறது.
யிரான் ஷெர்ரி என்ற 33 வயது கர்ப்பிணிப் பெண், தனது 34 வயது கணவர் கீட்டிங் ஷெர்ரி ஆகிய இருவரும் தங்கள் மூன்று வயது மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
ஷெர்ரி தம்பதியினர் குடும்பமாக பயணித்த போது, சாலை நெரிசலில் சிக்கிய நிலையில், யிரான் ஷெர்ரிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. யியான் ஷெர்ரியின் நிலைமை மோசமாக, சாலை நெரிசலும் சரியாகாத நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் செல்ல முடியது என்பதை உணர்ந்துள்ளனர்.
எனவே கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியதோடு, அதனை மருத்துவமனைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு, அவர் பிரசவ வலியால் துடித்த தன் மனைவியைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.
`அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு வலியின் காரணமாக அழுத்தத் தொடங்கினார். நான் அவரிடம் `யிரான், பரவாயில்லை.. நீ மூச்சை சரியாக விடுவதில் கவனம் செலுத்து’ எனக் கூறினேன். ஆனால் அது எனக்கு நானே கூறியது. எனது அட்ரினலின் பதட்டத்தின் காரணமாக மிகவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது’ என ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார் கீட்டிங் ஷெர்ரி.
இதுகுறித்து பேசியுள்ள யிரான் ஷெர்ரி, மருத்துவமனைக்குச் செல்வதற்குச் செலவிடப்பட்ட 20 நிமிடப் பயணம் மிகவும் வலி நிறைந்ததாக இருந்ததாகவும், அவர் தொடர்ந்து காரில் பொருத்தப்பட்டிருந்த திரையில் காட்டப்படும் பயண நேரத்தையே கண்காணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கார் நுழைந்தவுடன், குழந்தை `மேவ் ஷெர்ரி’ பிறந்துள்ளார். அப்போது மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைக் காரின் முன் பக்க சீட்டில் வைத்து வெட்டியுள்ளனர்.
டெஸ்லா காரில் பிறந்த மேவ் என்ற குழந்தையை மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் `டெஸ்லா பேபி’ என்றழைக்கத் தொடங்க, இந்த விவகாரம் பலரையும் சென்றடைந்து வைரலாகியுள்ளது. டெஸ்லா காரில் பிறந்ததால், தங்கள் குழந்தைக்கு `டெஸ்’ என்று பெயர் சூட்டலாம் என ஷெர்ரி தம்பதியினர் ஆலோசித்ததாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.