தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்
லண்டனில் தீபாவளி இரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் வசித்து வரும் இந்துக்களும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வெளிநாட்டில் வசிப்பவர்களும் இந்தியாவில் உள்ளவர்களை போலவே புத்தாடைகள் அணிவதுடன் பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பெரும் தீ விபத்து:
இங்கிலாந்தின் லண்டனில் அமைந்துள்ளது ஹவுன்ஸ்லோ. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆரோன் கிஷன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சீமா ரத்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்கள் இவர்கள். இவர்கள் லண்டனில் வசித்து வந்தாலும் இவர்கள் ஒவ்வொரு தீபாவளியையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளியன்று இரவு 10.20 மணியளவில் பெரும் சத்தத்துடன் தீ விபத்து ஆரோன் கிஷோன் வசிக்கும் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு கீழே வந்துள்ளனர். மேலும், அங்குள்ள தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு:
இந்த கோர தீ விபத்தில் ஆரோன் கிஷன் அவருடைய குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் சீமா ரத்ரா மற்றும் அவர்களின் 3 குழந்தைகளும் தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய ஆரோன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் மற்றொரு நபரும் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் ஆரோனின் உறவினரா? யார் அவர்? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து கூறிய ஆரோனின் பக்கத்து வீட்டு பெண் பெலிசியா, ஆரோன் தன்னுடைய குழந்தைகள், தன்னுடைய குழந்தைகள் என்று அலறிய சத்தம் கேட்டதாக கூறியது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.
பெரும் சோகம்:
தகவல் அறிந்ததும் ஏராளமான தீயணைப்பு வாகனங:களும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னர், தீ அணைக்கப்பட்டது. படுகாயமடைந்த ஆரோன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Sri Lanka Earthquake: இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திருச்செந்தூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க: Rishi Sunak : பிரிட்டனில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.. கம்பேக் கொடுத்த டேவிட் கேமரூன்.. ரிஷி சுனக்கின் பக்கா பிளான்