ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு கத்தி குத்து… இனவெறி தாக்குதலா? - அரசின் உதவியை கோரும் பெற்றோர்!
அவர் 11 முறை கத்தியால் குத்தப்பட்டதாகவும், முகம், மார்பு மற்றும் வயிற்றில் பல காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெற்ற நிலையில், 28 வயது இந்திய மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவும் இனவெறியும்
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாகவே இந்தியர்கள் மீது வேற்றுநாட்டவர் என்ற இனவெறி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிப்பதற்கு சென்ற மாணவர்கள் பலர் கொலை செய்யவும் பட்டுள்ளனர். இதற்காக அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் இணைந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய பல போராட்டங்களும் நடத்துவது நாம் அறிந்ததுதான். இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மாணவர் சுபம் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும் அதற்காகத்தான் என்று அவரது தந்தை குறிப்பிடுகிறார்.
11 இடங்களில் காயம்
பலியானவர் சிட்னியில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வரும் ஷுபம் கார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குறைந்தது 11 முறை கத்தியால் குத்தப்பட்டதாகவும், முகம், மார்பு மற்றும் வயிற்றில் பல காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இனவெறி தாக்குதல்
மாணவர் சுபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று தெரிவித்தனர். இந்த தாக்குதல் இனவெறி தாக்குதல் என சுபம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, ஒரு வாரத்திற்கும் மேலாக ஆஸ்திரேலிய விசாவைப் பெற முயற்சித்தோம், ஆனால் பலனளிக்கவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
சுபமின் தந்தை பேட்டி
சுபம் ஐஐடி மெட்ராஸில் பிடெக் மற்றும் எம்டெக் முடித்த பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்பிற்காக சேர்ந்தார். இந்த நிலையில் இனவெறி காரணமாக கத்தியால் குத்தப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபமின் தந்தை ராம்நிவாஸ் கார்க் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் பற்றி அவரது மகனுக்கோ அல்லது அவரது நண்பர்களுக்கோ தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் இனவெறித் தாக்குதலாகத் தோன்றுவதாகவும், இதற்காக இந்திய அரசின் உதவியைக் கோருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், ஆக்ரா டிஎம் நவ்நீத் சாஹல் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் விசா விண்ணப்பம் செயலாக்கத்தில் உள்ளது, நிர்வாகம் வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி வருகிறது என்றார். விசாவிற்காக சிட்னியில் உள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும் சாஹல் கூறினார்.