24 மணிநேரத்தில் 2,200 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - எரிமலை வெடிக்கும் என எச்சரிக்கை
ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் எரிமலை வெடித்து சிதறும் என எச்சரிக்கை
ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில், அடிக்கடி நில அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துவது வழக்கம். இந்த நிலையில் தென்கிழக்கு பகுதியில் உள்ள தலைநகரான ரெய்க்விக்கை பகுதியில் 24 மணி நேரத்தில் மட்டும், 2, 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதில், 7 நிலநடுக்கள் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது என்பதையும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்தடுத்து தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் ரெய்க்விக்கை பகுதியில் இருக்கும் எரிமலை எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய எரிமலைகளை ஐஸ்லாந்தில் உள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தின் ஹே ஜஃப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடித்ததில் ஐரோப்பா கண்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் பயணித்த ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் தவித்தனர். கொரோனா பரவல் இருந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளிலும், ஐஸ்லாதில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
2021ம் ஆண்டு ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் 800 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து. இது தவிர, அந்த ஆண்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் நிலநடுக்கள் பதிவாகின. தற்போது ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அது எரிமலை வெடிப்புக்கான சமிக்ஞைகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.