மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
அனுமதிக்கப்பட்ட வழிக்கு மாற்றாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியின்றி சென்ற இருகப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில், அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோனும் ஈரான் ராணுவத்தால் அழிக்கப்பட்டது.
கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் அனுமதித்த வழிக்கு மாறாக வேறு பகுதி வழியாக ரகசியமாக பயணித்த இருக்கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இது குறித்து தெரிவித்துள்ள ஈரான், அனுமதிக்கப்பட்ட வழிக்கு மாற்றாக பயணிக்கும் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாதது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஈரானுக்கு உட்பட்ட காஷிம் தீவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பறந்து வந்த அமெரிக்காவின் டிரோன் ஈரான் இராணுவத்தால் அழிக்கப்பட்டது.
ஓயாத பிரச்சனை: தீராத பதற்றம்!
இஸ்ரேலை எதிர்த்து வந்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்ததன் காரணமாகவும், அணுசக்தி கட்டமைப்புக்காகவும் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்த ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் தொடங்கியது. அப்போதிலிருந்து நீரிணையை மூடி வரும் ஈரான் தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹோர்மூசை கடக்க அனுமதியளித்து வருகிறது.
4 நாடுகளுக்கு மட்டுமே அனுமதியளித்த ஈரான்
ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்தியா, சீனா, கத்தாா், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு எவ்வித தடையும் இல்லையென ஈரான் அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து அதிகளவில் மருந்துப்பொருட்களை ஈரான் இறக்குமதி செய்வதன் காரணமாகவே, இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















