Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த விதிமுறைகள் என்னென்ன.?
Vinayagar Chaturthi 2023 : விழுப்புரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அமைப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல்துறை, மின்சாரத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் இன்று (16.09.2023) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் விநாயகர் சிலையை கரைத்தல் போன்ற நிகழ்வுகளில் அனுமதி வழங்குவது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்படுத்துதல் மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வழிகாட்டுதல்களையும் முழுமையாக பின்பற்றிட ஆணையிட்டுள்ளது.
மேற்கூறப்பட்டவற்றின் அடிப்படையில் எதிர்வரும் 18.09.2023 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் உருவ சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்குதல் முதல் அவற்றை பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைப்பது வரையிலான களத்தில் பொது அமைதி, பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு பின்வரும் வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடித்திட அனைத்து அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விநாயகர் சிலைகளை நிறுவிட உரிய அனுமதி சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களால் வழங்கப்படும். அவ்வாறு சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படவுள்ளது தொடர்பாக உரிய பத்திரிக்கை செய்தி வெளியிடப்படும். அனுமதி கோரும் தரப்பினர் தங்களது மனுவினை (படிவம் 1ல்) கீழ்கண்ட தடையின்மை சான்றுகளுடன் சமர்ப்பித்துக் கொள்ள வேண்டும். பட்டா நிலமாக இருப்பின் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டும். சிலை நிறுவ உள்ள இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாக இருப்பின் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமிருந்தும் நெடுஞ்சாலை மற்றும் வேறு துறையினர் எனில் சம்மந்தப்பட்ட துறையிடமிருந்தும் தடையின்மை சான்று பெறப்படவேண்டும்.
தொடர்புடைய காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடமிருந்து தடையின்மை பெறப்பட வேண்டும். (ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதி). தீயணைப்பு துறையினரிடமிருந்து தற்காலிகமாக சிலைகள் அமைப்பதற்கு தீ மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி அமைக்கப்படவுள்ளது என்பதற்கான மற்றும் அத்துறையினரின் தடையின்மை சான்று பெறப்படவேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து சிலை வைக்கப்படவுள்ள இடத்திற்கான மின் இணைப்பு தொடர்பான அக்கழகத்தினரின் தடையின்மை சான்று பெறப்படவேண்டும். மேற்கண்ட விவரங்களுடனான மனுக்கள் சார் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரால் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி (படிவம் 2ல்) வழங்கிடுவதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள சிலையானது தூய களி மண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இரசாயன வர்ணம் பூசப்பட்ட மற்றும் Plaster of Paris மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. தடைசெய்யப்பட்ட இரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத் தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்திட வேண்டும். நச்சு மற்றும் மக்காத இரசாயனங்களை கொண்டு சிலைகள் செய்வது தடை செய்யப்படுகிறது.
சிலை நிறுவ தற்காலிக கொட்டகை,பந்தல் அமைத்திடும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். மேலும், கொட்டகையின் உள்ளே செல்வதற்கும் மற்றும் வெளியே வருவதற்கும் அகலமான வழிகள் ஏற்படுத்திட வேண்டும். சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மேற்படி சிலை நிறுவி வழிபடும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை சேமித்து வைப்பதை தடை செய்ய வேண்டும்.
நிறுவ உத்தேசிக்கப்பட்ட சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் இதர வழிபாட்டு தளங்கள்ஃமருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் இல்லாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூஜைக்காக காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் மட்டுமே மைக் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. ஒலிப்பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலிப்பெருக்கியின் மூலம் வெளியாகும் சப்தம் மற்றும் இசைப் பாடல்கள் அதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒலியின் அளவுக்கு (டெசிபலுக்கு) மிகையாக ஒலிக்க கூடாது. விநாயகர் சிலை அமைத்து வழிபடும் போது மின்சாரத்தை தட்டுதல் அல்லது மின்சார திருட்டுகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் போன்றவை நடைபெறா வண்ணம் அமைப்பாளர் கவனித்திட வேண்டும். மேற்படி சிலை நிறுவி வழிபடும் இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாகவோ குடநஒ டீழயசன வைக்க கூடாது.
சிலையின் பாதுகாப்பிற்காக இரண்டு தன்னார்வ தொண்டர்களை 24 மணிநேரமும் பணியில் நியமிக்க வேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் மின் விளக்குகளால் வெளிச்சமாக இருக்க வேண்டும். மின் நிறுத்தம் ஏற்பட்டால் ஜெனரேட்டர் செட் வழங்கப்பட வேண்டும். சாதீய வெறுப்புகளை தூண்டக்கூடிய முழக்கங்கள் மற்றும் பிற மதத்தினரின் மனதை புன்படுத்திடும்படியான செயல்களை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது. பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மத நல்லிணக்கம் பாதுகாப்பது தொடர்பாக வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்விதமான இரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இத்தகைய சிலைகளை கீழ்க்கண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். வழிபாட்டிற்கு பின்னர் விநாயகர் சிலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட
கீழ்காணும் இடங்களில் மட்டும் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்
- கிழக்கு கடற்கரை - மரக்காணம் முதல் கோட்டகுப்பம் வரை (பொம்மியார்பாளயம் , கைப்பானிக்குப்பம் மற்றும் எக்கியார்குப்பம்)
- அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம்
- விடூர் அணை
நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே மேற்படி விநாயகர் சிலைகளை ஏற்றி செல்ல பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை மோட்டார் வாகனச் சட்டம் -1988-ன்படி இருக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவும் இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. வழிபாடு செய்யப்பட்ட சிலைகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள துணிகள் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட பூக்கள் மற்றும் அலங்கார பொருட்கள் ஆகியவைகளை சிலைகளை கரைக்கும் முன்பு தனியே அவைகளை அகற்றிவிட்டு பின் சிலைகளை கரைக்க வேண்டும். அகற்றபட்டவைகளை மறுசுழற்சி அல்லது உரம் தயாரிப்பதற்காகவோ பயன்படுத்த வேண்டும். மக்காத பொருட்களை குப்பை கிடங்கில் தனியாக சேகரிக்க வேண்டும்.
சிலைகள் கரைக்கப்படக் கூடிய இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும். மேலும் சிலைகள் கரைக்க கூடிய இடத்தின் அடியில் செயற்கையிலான தரைப்பகுதி அமைக்கப்படவேண்டும். விநாயகர் சிலைகளை ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை நீரில் கரைத்த 48 மணி நேரத்திற்குள் சிலைகளுடன் கொண்டுவரப்பட்ட பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் அகற்றி சுத்தம் செய்திட வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் குறிப்பாக பெருநகராட்சிகளில் சிலைகளை கரைப்பதற்கு முன் கரைக்கும் போது மற்றும் கரைப்பதற்கு பின் தண்ணீரின் தரக்கட்டுப்பாட்டை கண்டறிய வேண்டும். அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் விநாயகர் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் மற்றும் சீரான நடைமுறையினை பின்பற்றிட Single Window System நடைமுறை சிறப்பாக பின்பற்றி வந்துள்ளது. அவ்வாறே இந்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து சிலை வைக்க அனுமதி கோரப்படும் நேர்வில் தொடர்புடைய துறையினர் தொடர்புடைய சார் ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்தே தொடர்புடைய உயர் அலுவலர்களின் இசைவு மற்றும் ஆலோசனையினை பெற்று அவர்களின் துறை சார்ந்த இசைவினையோ அல்லது மறுப்பினையோ தெரிவித்திடும் நேர்வில் கோட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மனுக்களை பரிசீலனை செய்து ஆணை பிறப்பித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும், இவ்வினத்தில் வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பாக தொடர்புடைய ஆய்வாளர்களுக்கும் காவல் உட்கோட்ட அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தினசரி அறிக்கை அனுப்பிட கோட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கடலோரம் மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது விபத்துக்களை தவிர்த்திட ஏதுவாக தேவையான உபகரணங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த நபர்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க உள்ளாட்சித் துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயயணைப்புத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.