Villupuram: சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்ய சென்ற போலீஸ்; பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
சாராயம் விற்பனை செய்தவரை டவுன் போலீசார் கைது செய்ய சென்றபோது பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாராயம் விற்பனை செய்தவரை டவுன் போலீசார் கைது செய்ய சென்றபோது பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகர பகுதியான இந்திரா நகர் வாய்க்காமேடு பகுதியை சார்ந்த லட்சுமி என்ற மூதாட்டி அப்பகுதியில் சாராயம் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் டவுன் போலீசார் மூதாட்டி மீது பல்வேறு சாராய வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். எத்தனை முறை போலீசார் சாராய வழக்கு பதிவு செய்தாலும் மூதாட்டி சாராயத்தினை மறைமுகமாக விற்பனை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் சாராயத்துடன் சேர்த்து கஞ்சாவும் லட்சுமியின் மகன் சின்னமணி விற்பனை செய்வதாக டவுன் காவல் ஆய்வாளர் காமராஜிக்கு வந்த தகவலின் பேரில் டவுன் காவல் ஆய்வாளர் காமராஜ் வாய்க்காமேடு பகுதிக்கு சென்று சின்னமணியை பிடித்து விசாரனை செய்தனர்.
அப்போது சின்னமணி நாங்கள் சாராயம் விற்பனை செய்யவில்லை கஞ்சாவும் விற்கவில்லை என போலீசாருடன் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். அப்போது சின்னமணியை காவல் நிலையம் சென்று விசாரனை செய்து கொள்ளலாம் என போலீசார் அழைத்த போது விசாரனைக்கு வர மறுத்து சின்னமணியின் உறவினர்கள் திடீரென பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக கூறி விழுப்புரம் புதுச்சேரி சாலையான காந்தி சிலையில் சாலையில் நடுவே படுத்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தை மறியலை போலீசார் கலைத்தனர். இதனால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்