லட்சங்களை அள்ளப்போவது யார்? விழுப்புரத்தில் ஜனவரி 9-ல் திருக்குறள் தேர்வு - ஆட்சியர் அழைப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மாநிலம் முழுவதும் 'குறள்வாரம்' கொண்டாடப்பட உள்ளது.

விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மாநிலம் முழுவதும் 'குறள்வாரம்' கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குறளாசிரியர் மாநாடு மற்றும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 'குறள்வாரம்'
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026 ஆம் ஆண்டில் சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு மற்றும் திருக்குறள் வினாடிவினா நடத்த தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு / அரசு உதவிபெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை/ அனைத்துநிலை அலுவலர்கள் / ஊழியர்கள்) ஆக மொத்தம் 30 பேர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பெறும் 30 பேர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 9 பேர்கள் (3 அரசு பணியாளர்கள் 6 ஆசிரியர்கள்) திருக்குறள் வினாடிவினா மாநிலப்போட்டியில் 3 அணிகளாக கலந்துகொள்வார்கள். வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,50,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.1,20,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ,90,000/- மூன்று அணிகளுக்கு ஊக்கப்பரிசாக ரூ.15,000/- வழங்கப்பெறும்.
15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 09.01.2026 ஆம் நாளன்று (வெள்ளிக்கிழமை) 02.00 பி.ப மணிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு வருகை புரிய வேண்டும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScLoVLUhVQRMGwoFLmmetXtVN3VYMeuxyYngYXeBMQopoSnw/viewform?usp=header இணைப்பு வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக (நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை) வந்தும் பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்தெரிவித்துள்ளார்





















