விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக நிர்வாகியால் பரபரப்பு
விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக நிர்வாகியால் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தாலுக்கா காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு சாதமாக செயல்படுவதாக கூறி, திமுக இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் சுரேஷ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கோபாலகிருஷ்ணன். திமுக கோலியனூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவர், ஜானகிபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அவரது கடையின் அருகில் மற்றொரு டீக்கடை நடத்தி வரும் சசிகுமார் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் சுரேஷை சசிகுமார் தரப்பினர் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியும் மற்றும் அரிவாளால் வெட்டியும் உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் சுரேஷ் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர் . ஆனால் இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து சசிகுமார் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதால் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியும் காட்டுவதாக கூறி சுரேஷ் தனது மனைவி மகன் தாய் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுவரொட்டி பதாகை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தாலுகா காவல்துறை ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் சசிகுமார் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் தங்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் சசிகுமார் மீது எஸ்சி எஸ்டி பிரிவிலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் அதனை பொறுப்படுத்தாமல் சாதாரண வழக்கு பதிவு செய்து தங்களது உயிரை துச்சமாக நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.