இசிஆர் சாலையில் மீனவர்கள் போராட்டம்: துறைமுகம் அமைக்கும் வரை ஓயமாட்டோம்!
மீன்பிடி துறைமுகம் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி அனுமந்தை குப்பம் மீனவர்கள் ஈசிஆர் சாலை ஓரம் உண்ணாவிரத போராட்டம்

விழுப்புரம்: மீன்பிடி துறைமுகம் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி அனுமந்தை குப்பம் மீனவர்கள் ஈசிஆர் சாலை ஓரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வராததால் இசிஆர் சாலையில் பந்தல் அமைத்து மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மீன்பிடி துறைமுகம் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட மீன்பிடி பைபர் படகுகள், 20க்கும் மேற்பட்ட அதிநவீன விசைப்படகுகள் மற்றும் கட்டு மரங்கள் போன்றவைகளை பயன்படுத்தி தினமும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மினி துறைமுகம், மற்றும் தூண்டில் வளைவு இல்லை. இதனால் இங்குள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பு இல்லாமல் கடற்கரை ஓரமே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பருவ மழை காலம், கடலில் உண்டாகும் மாறுபட்ட நீரோட்டம் போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது பாதுகாப்பு இல்லாமல் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்படும் பைபர் படகுகள், வலைகளை கடலில் அடித்துச் செல்லும் நிலை உண்டாகிறது.
இதுபோல் கடலில் நிறுத்தி வைக்கப்படும் விசைப்படகுகள் கூட சில சமயங்களில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிகிறது, ஒரு சில படகுகள் தண்ணீரிலேயே மூழ்கி விட்டது, மேலும் பாதுகாப்பில்லாமல் மீன் பிடி தொழில் செய்வதால் அடிக்கடி கடலில் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புயல் உள்ளிட்ட அதிகப்படியான இயற்கை சீற்றங்களின் பொழுது இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது விசை படகுகளை பாதுகாப்பிற்காக புதுவை மாநிலத்தில் இருக்கும் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதுபோல் இங்குள்ளவர்கள் விசைப்படகுகளை அங்கு எடுத்துச் சென்று நிறுத்துவதால் புதுவை மாநில மீனவர்களுக்கும், தமிழக பகுதி மீனவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்ட பிரச்சனைகளும் உண்டாகிறது. இதனால் அனுமந்தை மீனவர் குப்பத்தில் மினி மீன்பிடி துறைமுகமோ அல்லது தூண்டில் வளைவோ அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் இப்பகுதியில் மினி மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக அனுமந்தை மீனவர் குப்பம் கடற்கரைப் பகுதியில் உடனடியாக மினி மீன்பிடி துறைமுகம், அல்லது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனுமந்தை குப்பம் மீனவர்கள் அனுமந்தை இசிஆர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் பந்தல் அமைத்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் உள்ளிட்ட ஒரு சில அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அனுமந்தை மீனவர் குப்பத்தில் உடனடியாக மினி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் நீலவேணி, கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி உமாதேவி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய மீனவ பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்கள் மீனவர் கிராமத்தில் மினி மீன்பிடி துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தால் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம், இல்லையென்றால் தொடர்ந்து உண்ணாவிர போராட்டம் நீடிக்கும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் மதியம் 12 மணி வரையில் மாவட்ட ஆட்சியர் நேரில் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை இ சி ஆர் சாலையின் நடுவில் அமைத்து சாலையிலேயே உண்ணாவிர போராட்டத்தை துவங்கினர். இதனால் புதுவை சென்னை இசிஆர் வழிதடத்தில் சென்ற வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்து நின்றது. இது பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கடிதம் மூலம் வாக்குறுதி அளிப்பார் என கூறினர். அதற்கு அங்கிருந்த மீனவர்கள் வரும் 10 நாட்களில் எங்கள் பகுதியில் மினி மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கூறினர். அப்போது அதிகாரிகள் உங்களது கோரிக்கையை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை ஏற்றுக்கொண்ட மீனவர் பொதுமக்கள் இ சி ஆர் சாலையிலிருந்து பந்தல்களை வெளியில் எடுத்துச் சென்று அமைதியாக சாலையோரம் அமர்ந்து மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இந்த சம்பவத்தால் புதுவை சென்னை இசிஆர் வழிதடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






















