விழுப்புரத்தில் சாலை அமைக்க பிடுங்கப்பட்ட பனங்கன்று; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
பனையில் ஆண், பெண் மரங்கள் உண்டு. ஆண் பனை காய்க்காது. பெண் பனை மட்டுமே காய்க்கும் தன்மை கொண்டது.
விழுப்புரம்: ராதாபுரத்தில் தார்சாலை அமைப்பதற்காக ஏரிக்கரையிலிருந்த பனங்கன்றுகள் பிடுங்கப்பட்டதை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிடுங்கப்பட்ட பனங்கன்றுகளுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் ஏரிக்கரையில் வனம் அறக்கட்டளை சார்பாக ஏரிக்கரையின் இருபுறமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பனைவிதைகளை கடந்த 2014 ஆம் ஆண்டு நடவு செய்து தினந்தோறும் பனங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக ஏரிக்கரையில் தார் சாலை அமைப்பதற்காக கரைப்பகுதியில் இருந்த 200 க்கும் மேற்பட்ட பணங்கன்றுகளை தார்சாலை ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக பிடுங்கி வீசியுள்ளார்.
பனங்கன்று பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து அப்பகுதியை சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிடுங்கப்பட்ட பனங்கன்றுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி பனை விதைகள் நடவு செய்து வருகின்ற நிலையில் பனங்கன்றுகள் பிடுங்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
"பனங்கன்றுகள் நடவு "
பனையில் ஆண், பெண் மரங்கள் உண்டு. ஆண் பனை காய்க்காது. பெண் பனை மட்டுமே காய்க்கும் தன்மை கொண்டது. எனவே, நிலத்தில் நடவு செய்யும்போது, மகரந்தச் சேர்க்கைக்காக நூறு பெண் மரங்களுக்கு, இரண்டு ஆண் மரங்கள் என்கிற விகிதத்தில் வளர்க்கலாம். பனம்பழத்தில் ஒரு கொட்டை மட்டும் இருந்தால், அதில் பெண் மரமாக வளரும். இரண்டு, மூன்று கொட்டைகள் உள்ளவை, ஆண் மரங்களாக வளரும். மூன்று விதைகள் இருக்கும் பழத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு ஆண்! மூன்றாவது பெண் !!
பனங்கொட்டைகளைச் சேகரித்து, தண்ணீர் தேங்கி நிற்காத நிலத்தில் பரவலாகக் கொட்டி வைத்து அவற்றை மூடும் அளவுக்கு மண்ணைத் தூவி விடவும். வாய்ப்பிருந்தால், வாரம் இரண்டு முறை லேசாக தண்ணீர் தெளித்து விடலாம். அடுத்த, மூன்று மாதங்களில், அவை முளைப்பு எடுக்கும். முளைத்த கொட்டைகளைத் தேர்வு செய்து நடவு செய்யலாம். தண்ணீர் வசதி உள்ள இடங்களில், பனை மரங்கள் வளர்ந்து பலன் கொடுக்க 15 ஆண்டுகள் ஆகும். வறட்சியான பகுதி என்றால், 25 ஆண்டுகள் வரை ஆகும்.