விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்
முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் : 6 மாணவர்களுக்கு உடனடி மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டி.இ.ஓ., ஆய்வு செய்தார். இப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்களின் எண்ணிக்கை 206 ஆக இருந்தது. 116 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மறுதேர்விற்கு அப்போதைய தலைமை ஆசிரியர் மூலம் பணம் கட்டியிருந்தனர். இதில் 6 மாணவர்களுக்கு உடனடி மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. இதுகுறித்து தேர்வு எழுத முடியாமல் போன ஒரு மாணவரின் தாய் முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் டி.இ.ஓ., மகாலட்சுமி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர், ஹால் டிக்கெட் வழங்கப்படாததற்கு தனிப்பட்ட உள் நோக்கம் ஏதும் இல்லை. விடுமுறை காலத்தில் நடைபெற்ற பணி என்பதால் அப்போது பணியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறினார்.
மாணவரின் தாய் முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் கூறியிருப்பதவது :-
நான் தலித் கிருத்தவர். கடந்த 20-வது ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் எனது உடல் நிலையும் மோசமடைந்து நான் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு முடங்கிவிட்டேன். வருமானத்திற்கு கஷ்டப்பட்டு மூத்த பிள்ளைகளின் வருமானத்தில் அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றேன்.
எனது கடைசி மகன் ஜான் திலீப் டி சில்வா கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி படித்து வருகிறார். அந்த தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்றுள்ளார். எனவே நான் உடனடி தேர்வுக்கான கட்டணத்தை ரூ.305/-யை பள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தினேன். சில நாட்கள் சென்ற பின் தேர்வு நுழைவுச்சீட்டு அனைவருக்கும் வந்துள்ளது எனது மகனுக்கு வரவில்லை. இதனை அறிந்த எனது மகன் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். வகுப்பு ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுமாறு கூறியுள்ளார். தலைமை ஆசிரியரை அணுகி கேட்டபோது அவர் அலட்சியமாக அடுத்த ஆண்டு எழுதிக்கொள்ளலாம் என பதிலளித்துள்ளார் . மேலும் இந்த ஆண்டு பணம் கட்டி அடுத்த ஆண்டு எழுத சொன்னால் என்ன அர்த்தம் என கேட்டபோது கணினி ஆசிரியரை கேளுங்கள் அவர்தான் ஆன்லைனில் பணம் கட்டினார் என்று கூறி தட்டி கழித்தார்.
ஆன்லைனில் பதிவு செய்யும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்களிடம் எனது மகன் தனது தேர்வு கட்டண ரசீதை கேட்டதற்கு அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளார். சரி பணத்தையாவது கொடுங்கள் என கேட்ட போது அடுத்த வருடத்திற்கான கட்டணமாக எடுத்துக்கொண்டோம் என மிரட்டியுள்ளார்கள். மேலும் தலைமை ஆசிரியரும் கணினி ஆசிரியரும் உடனடி தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்பதை அறிந்தேன். எனது மகனின் பெயரை பதிவு செய்யாதது மட்டுமில்லாமல் அதனைப் பற்றிய தகவலை அவரின் பெற்றோராகிய எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனது மகனிடம் இதை யாரிடமும் சொல்லி பெரிதாக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் திரு.ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்கள் எனது மகனை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த என் மகன் பள்ளிக்கு செல்லாமல் பயந்து வீட்டிலேயே உடல் நிலையும் மனநிலையும், பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை மகன் எதிர்கொள்ள பயந்து பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் அங்கு சென்றால் மாணவர்கள் அவமானப்படுதுவார்கள் என்று வீட்டிலேயே முடங்கி உள்ளார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி 11-ம் வகுப்புக்கான உடனடி தேர்வு முடிவுகள் வெளியானபோது தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்பதை அறிந்து எனது மகன் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். எனக்கு Hall ticket கிடைத்திருந்தால் நானும் தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளான். இதனால் என் மகனின் வகுப்பு ஆசிரியர் அவனை சக மாணவர்கள் முன் தாக்கி வகுப்பறையைவிட்டு வெளியே போ, உன் தாயாரை அழைத்துவா வா என்று கூறியுள்ளார். நான் அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் எவ்வளவோ கெஞ்சியும், கை எடுத்து கும்பிட்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அந்த ஆசிரியர் உன் மகன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, எனக்கு சம்பளம் என் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று அலட்சியமாக கூறி TC-யை வாங்கிக்கொண்டு போ என்றார். இதனால் நான் என் மகன் தேர்வு எழுதவும் முடியல பள்ளிக்கு போகவும் முடியல என்று வருந்தி உயிருடன் வாழ்வதைவிட சாவதேமேல் என்று வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இப்படி எனது மகனை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி எதிர்காலத்தையே பாழாக்கி தற்கொலைக்கு தூண்டிய தலைமை ஆசிரியர் திரு ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்கள் கல்வியில்லாமல் இழந்துபோன என் மகனின் வாழ்க்கையை எப்படி சரி செய்வார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் நாங்கள் ஏழை என்பதாலும், ஆதிதிராவிட கிருத்தவர் என்பதாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதினை அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் இருவரும் திட்டமிட்டு மகனின் எதிர்காலத்தை சீற்குலைதுள்ளனர். இந்த நிலைமையில் அவர்களது முகனோ மகளோ இருந்திருந்தால் இப்படி அலட்சியமாக இருப்பார்களா ? என தெரியவில்லை. ஆகவே எங்கள் பிரச்சினையை உங்களிடம் கண்ணீரோடு கூறுவதோடு எனது மகனின் கல்வியை தொடர உதவ வேண்டுகிறேன். மேலும் எனது மகனுடன் படித்தவர்களிடம் விசாரித்த போது இதனைப் போன்று எத்தனை மாணவர்கள் உள்ளார் என்பதை தெரியவில்லை சாதி ரீதியாகவும் வேற்றுமை காட்டியும் எங்களை வஞ்சித்து வருகிறார்கள் என ஒரு சில மாணவர்கள் கூறுவதை அறிந்தேன்.
மேலும் தங்களது நல்லாட்சியில் தங்களுக்கு அவ பெயர் ஏற்படுத்தவே தலித் இனத்தவர்களாகிய எங்களுக்கு மறைமுகமாக வன்கொடுமை செயலில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு தங்களால் மட்டுமே தகுந்த நீதியும், தீர்வும் காண முடியும் என்பதாலும், தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகாரில் குறிபிட்டுள்ளார்.