விழுப்புரம் மக்களே ரெடியா? வரப்போகுது பிரம்மாண்ட தடுப்பணை! ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு!
விக்கிரவாண்டி வட்டம் வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தீடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த (28.01.2025) அன்று நலத்திட்ட உதவிகள் துவக்கிவைத்தார். மேலும் விக்கிரவாண்டி வட்டம் வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, இன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைப்பதற்காக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டியாறு மற்றும் வராகநதி ஆகியவை வீடூர் அணையில் ஒன்றாக சேர்கின்றன. வீடூர் அணையின் கீழ்புறத்திலிருந்து தொடரும் சங்கராபரணி ஆறானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழியாக சுமார் 41.50 கி.மீ. பயணித்து புதுச்சேரிக்கு அருகில் வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது.
மேலும், சங்கராபரணி ஆற்றில் விரிவான மட்ட அளவுகள் எடுத்து, தள ஆய்வுகள் கள் மேற்கொள்ளப்பட்டு, சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் வீடூர் அணையிலிருந்து 20 கி.மீ தூரத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பணை கட்டப்படுவதால், வழுதாவூர், கலிங்கமலை, வி.நெற்குணம். பக்கிரிப்பாளையம், கலித்திராம்பட்டு, முட்ராம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள 380 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் தடுப்பணையின் அருகே உள்ள 218 எண்ணிக்கையிலான கிணறுகள் நீர்செறிவூட்டப்படும். மேலும் இத்தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாய உற்பத்தி மற்றும் குடிநீரின் தரம் மேம்படும். பணி துவங்கப்பட்டநாள். பணிகள் துவங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைதொடர்ந்து, வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை கூடுதல் கட்டடத்தில் முன்பதிவு அறை, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு (ஆண்கள்), புறநோயாளிகள் பிரிவு (பெண்கள்), ஊசி போடுமிடம், கட்டு கட்டுமிடம், ஊடுகதிர் வீச்சு அறை, மருத்துவர் அறை, செவிலியர் அறை மற்றும் கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளோடு கட்டப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மயிலம் ஒன்றியம் சின்னநெற்குணம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்றுவரும் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் ராபி பருவ பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை அலுவலர்களும் மற்றும் தன்னார்வளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புல உட்பிரிவு எண்களுக்கு பயிர் காப்பீடு குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு கைப்பேசி செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





















