மலைபோல் குவியும் மருத்துவக்கழிவுகள்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவலம்..நோய் பரவும் அபாயம்
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கழிவுகள் மலைபோல் கட்சியளிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மருத்துவமனை வளாகத்தில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியிலேயே கொட்டி மலைபோல குவிந்து கிடக்கின்றது. குழந்தைகள் பிரிவு மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் இப்படி கழிவுகள் மலை போல குவிந்து கொட்டிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
மருத்துவ கழிவுகள்
அது மட்டும் இல்லாமல் இந்த வளாகத்தில் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி உள் நோயாளிகளுக்கு மேலும் நோயை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் அங்கேயே எரிக்கப்பட்டும் வருகிறது. அதுமட்டுமில்லாமல், நோயாளிகள் சிகிச்சைபெற கூடிய கட்டிட்டங்களின் பின்புறத்தில் திறந்த வெளியில் இக்கழிவுகள் அனைத்தும் கொட்டப்படுகிறது, எரிக்கப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை 2016 ஆம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, மருத்துவக்கழிவு என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தடுப்பு செய்தல் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளாகும். இப்படி, வெளியாகும் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து சுத்திகரிப்பு செய்து அகற்றவேண்டும். இது, மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்வோர் மற்றும் பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்குவோர்களின் பொறுப்பாகும். மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை அனைத்து மருத்துவமனைகளும் சரிவர பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்வது மாநில சுகாதாரத்துறையின் பொறுப்பாகும்.
அதாவது, இதனை கண்காணிக்கும் பொறுப்பு மாநில அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தை சார்ந்ததாகும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இவ்விதிகளின் கீழ் 6261 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து, மருத்துவமனைகளும் மருத்துவக்கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் விஞ்ஞான முறைப்படி அகற்ற பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு
இந்த, பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் உயர் அழுத்த நீராவி மூலம் சுத்திகரிக்கும் கருவி, துரும்பாக்கும் கருவி, எரிப்பான் மற்றும் பாதுகாப்பான நிலநிரப்பு ஆகிய தொழில் நுட்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டில், 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றிலிருந்து, நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக்கழிவுகள் கையாளப்படுகின்றன.
அசுத்தமாக காணப்படும் மருத்துவமனை
மேலும், திருவள்ளூர், கடலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இப்படி, பல்வேறு விதிமுறைகள் இருந்தும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் அதனை பொருட்படுத்தவில்லை. கழிவுகளை மறுபடியும் அங்கேயே கொட்டி வருகின்றனர். இதனால், அம்மருத்துவ வளாகம் உள்ளேயும், அதனைச் சுற்றியும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.