மேலும் அறிய
Advertisement
மீன்பிடிப்பவர்கள் நலனுக்காக ஆற்றில் விடப்படும் வாணியாற்று நீர்- 3 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிட கோரிக்கை
’’ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் சென்றால் மூன்று ஏரிகளை உபரி நீர் மூலமாக நிரப்பிவிடலாம். இதனால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்’’
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை 65 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. தொடர்ந்து பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் வாணியாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் வழியாக மோளையானூர், வெங்கடசமுத்திரம், மெனசி ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, சாலூர், அதிகாரப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரிநீர் முதலில் பழைய ஆயக்கட்டான ஆலாபுரம் ஏரி நிரம்பி, ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை ஏரிகள் நிரம்பி, மீண்டும் ஆற்றில் சென்று அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. மேலும் மெனசி ஜீவா நகர் அருகே உள்ள ஒட்டிலிருந்து ஆற்றின் வழியாக பறையப்பட்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதி, நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து வாணியாறு அணையில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும் என குத்தகைதாரர்கள் பொதுப்பணி துறை அதிகாரிகளை கவனித்து, ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் வலியுறுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து ஆற்றின் வழியாக பறைப்பட்டி புதூர் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பறையப்பட்டி புதூர் ஏரி நிரம்பியதும் தண்ணீர் வீணாக ஆற்றில் செல்லும் நிலைதான் இருந்து வருகிறது. ஆனால் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி நிரம்பியதும், ஓந்தியம்பட்டி ஏரி, தென்கரைகொட்டை ஏரிகள் நிரப்பும். ஆனால் ஆலமரம் ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவரின் நலனுக்காக, கால அவகாசம் கொடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்காமல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். தற்பொழுது மழை தீவிரமடைந்து வருவதால், ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் சென்றால் மூன்று ஏரிகளை உபரி நீர் மூலமாக நிரப்பிவிடலாம். இதனால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆனால் பொதுப்பணித்துறை விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், மீன் குத்தகைதாரர் சுயநலத்திற்காக தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பறையப்பட்டி புதூர் ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக வாணி ஆற்றில் கலக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விரைந்து ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion