3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு... வெளுத்து வாங்கிய மழை... தத்தளிக்கும் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்: மரக்காணத்தில் உள்ள மத்திய மாநில அரசுக்கு சொந்தமான 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு.
மரக்காணம் உப்பு உற்பத்தி பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடற்கரையோர பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 3,500 ஏக்கா் பரப்பில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உப்பளத் தொழிலாளா்கள் பாத்தியிட்டு, கடல் நீரை தேக்கி உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் மரக்காணம் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது வருகிறது. மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இப்பகுதியில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன்களுக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் இருந்து பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் உப்பு உற்பத்தி துவங்கியது. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சராசரி உப்பு உற்பத்தியில் இந்த ஆண்டு 60 சதவீத உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தியில் நஷ்டம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கனமழை:
தமிழ்நாட்டில் நிலவும் வானிலை நிலை குறித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு:
இன்று இரவு 10 மணிவரை சுமார் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.