மூன்றாம் அலைப்பரவல் - புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்
’’இன்று முதல் தியேட்டர் மற்றும் பஸ்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவு’’
கொரோனா மூன்றாம் அலைப்பரவல் மற்றும் ஒமிரான் பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா, ஒமைக்ரான் தொற்றுகளை கட்டுப்படுத்துவது குறித்த கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல், சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், செய்தித்துறை செயலர் வல்லவன், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, கோவிட் தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விளக்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இன்று முதல் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையுடன் பிற அவசிய மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஊரடங்கு முறை ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் 2-வது அலையின் போது எடுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சித்தா, இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புத்துணர்ச்சி தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறையை கையாள வேண்டும். மக்கள் எளிதில் வந்து சிகிச்சை பெற வசதியாக அதற்காக தனி மையம் அமைக்க வேண்டும். அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூலிகை சாறு, ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கலாம். தடுப்பூசியை போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும், தொலை மருத்துவம் முறையை உடனடியாக தொடங்க வேண்டும். நடமாடும் பல்ஸ் ஆக்சி மீட்டர் வாகனம், நடமாடும் ஆக்சிஜன் வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தும் வகையில், மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். கொரோனா நோய் பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தியேட்டர், கடை வீதிகள், பஸ்கள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும். பொது இடங்களில் கிருமிநாசினி மையங்களை திறக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், நாட்டு நலப்பணித்திட்டத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோரை ஈடுபடுத்தலாம். தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )