புதுச்சேரி : 15-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் 23-ஆம் தேதி கூடுகிறது..
புதுச்சேரி 15-வது சட்டப் பேரவையின் இரண்டவது கூட்டத் தொடர் 23-ஆம் தேதி கூடுகிறது
புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கூடிய சட்டபேரவை உள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலுக்குப் பின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பிற்பகலில் நிதி அமைச்சர் பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடந்தது. அதன்பின் சட்டபேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்படி சட்டபேரவையானது 6 மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டப்பட வேண்டும். அதன்படி அடுத்த மாதம் 2-ந்தேதிக்குள் சட்டபேரவை கூட்டம் நடைபெற வேண்டும்.
இதற்காக புதுவை சட்டசபை வருகிற 23-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. இந்த சட்டபேரவை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இதையொட்டி சட்டமன்ற கூட்டம் நடக்கும் மைய அரங்கில் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி நாற்காலிகள், மேஜைகள், ஒலிபெருக்கிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அதை சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
ஆண்டின் முதலில் இந்த கூட்டம் கூட்டப்பட்டாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்பதால் கவர்னர் உரை இருக்காது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவையில் பல்வேறு காரணங்களால் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ஒரு சில மாதங்கள் கழித்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகவே மாறியுள்ளது.
ஆனால் இந்த முறை மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு துறையிலும் பட்ஜெட் தொடர்பான முன்தயாரிப்புகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. மேலும் மத்திய பட்ஜெட்டிலும் புதுவை மாநிலத்துக்கான மானியம் கடந்த நிதியாண்டைப்போல் ரூ.1,729 கோடிதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாநிலத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்