விழுப்புரத்தில் மென்பொருள் சுதந்திர திருவிழா! மாணவர்களுக்கு இலவச தொழில்நுட்ப பயிற்சி & எதிர்கால வாய்ப்புகள்!
விழுப்புரம்: தமிழக மாணவர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பயன்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்: தமிழக மாணவர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் மென்பொருள் கண்காட்சியை விகிளக் அறக்கட்டளையின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.
Software Freedom Day
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், VGLUG அறக்கட்டளை மாநில அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் "Software Freedom Day" சிறப்புடன் கொண்டாடப்படுவது போன்று, தமிழக மாணவர்களிடமும் மென்பொருள் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கட்டற்ற மென்பொருள் கண்காட்சி நிகழ்ச்சி
2025 ஆண்டிற்கான சிறப்பு நிகழ்வாக "கட்டற்ற மென்பொருள் கண்காட்சி – 2025" எனும் மாபெரும் விழா, செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து ஐந்து நாட்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐந்து முக்கிய கல்லூரிகளில் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அனுபவமிக்க மென்பொருள் பொறியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்று திறந்த மூலக் குறியீட்டின் அவசியம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.
முக்கிய அம்சங்கள்
இந்நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன:
- திறந்த மூல தொழில்நுட்பங்களை மையப்படுத்திய வோர்க்ஷாப் மற்றும் கையேடு வழிக் கற்றல் வகுப்புகள்
- தொழில்நுட்பக் கண்காட்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நேரடி திட்ட அனுபவங்கள்
- பன்னாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உரைகள், உலகளவில் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்ப மரபுகள் குறித்து விரிவான விவாதங்கள்
இந்த கண்காட்சி, மாணவர்கள் வகுப்பறை அறிவைத் தாண்டியும் தொழில்முறை உலகின் அனுபவங்களை நேரடியாகப் பெறும் முக்கிய மேடையாக அமையும்.
VGLUG அறக்கட்டளையின் பங்களிப்பு
பல ஆண்டுகளாக சமூகத்திற்கு கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வை பரப்பி வரும் VGLUG Foundation, கல்லூரி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் பயிற்சிகள், தொழில்நுட்ப முகாம்கள், புதுமை மையங்கள் ஆகியவற்றை உருவாக்கிய அனுபவம் கொண்டது. தற்போதைய கண்காட்சி, மாநில அளவிலான மாணவர்களை ஒருங்கிணைத்து சர்வதேச தரத்திற்குரிய திறனை உருவாக்கும் அடுத்தடுத்த படியாகக் கருதப்படுகிறது.
மென்பொருள் கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்.,
"இந்த கண்காட்சி, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவினை விரிவுபடுத்துவதோடு, உலகளாவிய அளவில் தொழில்நுட்ப சமூகங்களில் தங்களை நிலைநிறுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், சமூகப் பொறுப்பு உணர்வுடன் தொழில்நுட்ப உலகில் செயல்படும் தலைமுறையை உருவாக்கும் நிலையான முயற்சியாக இது அமையும்," என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியைச் சார்ந்த கூடுதல் விவரங்கள் விரைவில் VGLUG Foundation இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட உள்ளன.
நாம் ஒவ்வொரு மென்பொருளையும் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையில் அதனை இலவசமாக பயன்படுத்தும் வழிமுறைகளையும் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கும் விதமாக இந்த மென்பொருள் கண்காட்சி அமைந்திருந்தது.





















