வெளி நாட்டு கப்பல்கள் இந்திய கடலோர எல்லையில் 200 நாட்டிக்கல் மைல் தாண்டி வருவதை தடுக்க திட்டம் - அமைச்சர் எல். முருகன்
கொரோனா கால கட்டத்தில் அனைத்து துறைகளும் பாதிப்படைந்த பொழுது இந்திய நாட்டிற்கு ஏற்றுமதியில் 30 சதவீத அதிக வருவாயை கொடுத்தது மீன்கள் ஏற்றுமதி தான்.
புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் மீனவர்கள் சந்திப்பு மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். குறைகேட்பு நிகழ்ச்சியில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு கோரிக்கை வைத்து பேசியதாவது:-
தூண்டில் வளைவு:
மீனவ சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். சுருக்கு வலையால் பல்லாயிரம் மீனவ குடும்பங்கள் பிழைக்கிறது. எனவே சுருக்கு வலையை அனுமதிக்க வேண்டும். தமிழக பகுதியான பொம்மையார் பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் காலாப்பட்டு மீனவ பகுதிகளில் 4 கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. 4 கிராமங்களும் பாதிக்காத வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
ஹைட்ரோ கார்பன்:
மரக்காணத்திலிருந்து புதுச்சேரி வரை அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளை மீனவ பிரதிநிதிகளுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசியதாவது:- சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த பொழுதும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்த பொழுதும் இதுவரைக்கும் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 3000 கோடி. 2014 முதல் இதுவரை மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் மீனவ மக்களுக்காக மீன்வள புரட்சிக்காக துறைமுகங்கள் கட்டுவதற்காக கடல் சார்ந்த மேம்பாட்டிற்காக மீன் தொழில் ஏற்றுமதிக்காக இதுவரை 32,500 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கொரோனா கால கட்டத்தில் அனைத்து துறைகளும் பாதிப்படைந்த பொழுது இந்திய நாட்டிற்கு ஏற்றுமதியில் 30 சதவீத அதிக வருவாயை கொடுத்தது மீன்கள் ஏற்றுமதி தான்.
நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் முக்கியமானவர்கள். வெளி நாட்டு கப்பல்கள் இந்திய கடலோர எல்லையில் 200 நாட்டிக்கல் மைல் தாண்டி வருவதை தடுப்பதற்காக திட்டங்கள் போடப்பட்டுள்ளது. நம் நாட்டு மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் வரை மீன்பிடிப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆழ் கடலில் மீன் பிடிக்கும் படகு வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.1,065 கோடி ஒதுக்கி உள்ளது. இதில் 60 சதவீதம் மத்திய அரசு மாநில மானியமாக வழங்குகிறது. மீனவ கிராம வளர்ச்சிக்காக 100 மீனவ கிராமங்களை தேர்வு செய்து ஒவ்வொரு மீனவ கிராமத்தில் உள் கட்டமை வசதிக்காக 5 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.
மீன்பிடி தொழில் மட்டுமல்லாது கடல் சார்ந்த மாற்று தொழில்களில் மீனவர்கள் முன்னேறுவதற்கும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அக்குவா ஸ்போர்ட்ஸ், கியூபா டிரைவிங், மீன்வள அருங்காட்சியகம் ஆகிய தொழில்களில் மீனவர்கள் ஈடுபட வேண்டும். சுருக்குவலையை பொறுத்த வரை ஒரு கிராமம் ஒரு மாதிரி இருக்கிறது. மற்றொரு கிராமம் ஒரு மாதிரி இருக்கிறது. எனவே அனைத்து கிராம மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சுருக்கு வலைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்