புதுச்சேரி: சித்தேரி அணைக்கட்டில் 2 ஷெட்டர்கள் பழுது - 25 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்
சித்தேரி அணைக்கட்டில் இரண்டு ஷட்டர்கள் பழுதால் வெளியேற்ற முடியாத உபரிநீர் பாகூரை சுற்றியுள்ள 25 கிராமங்களில் புகும் அபாயம்
புதுச்சேரி சித்தேரி அணைக்கட்டில் இரண்டு ஷட்டர்கள் பழுதால் வெளியேற்ற முடியாத உபரிநீர் பாகூரை சுற்றியுள்ள 25 கிராமங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மழை பொழிவு அதிகளவில் உள்ளதால் மொத்தமுள்ள 84 ஏரிகளில் பெரும்பான்மையானவை முழு கொள்ளளவை எட்டிவிட்டன. பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழலில் உள்ளன. பாகூர் அடுத்த குருவிநத்தத்தில் உள்ள சித்தேரி அணைக்கட்டு முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. அப்போது அதிலிருந்த நான்கு மதகுகளில் இரண்டு மதகுகள் வேலை செய்யவில்லை. அவற்றை திறக்க முடியாததால் இரு மதகுகள் மட்டுமே திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், மொத்தம் 4 மதகுகளையும் திறந்தால்தான் உபரிநீரை அதிகளவில் வெளியேற்ற முடியும். தமிழக பகுதியில் இருந்து வரும் உபரிநீரும் அதிகளவில் வருகிறது. ஷட்டர்களை திறக்க முடியாததால் பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம், ஆராய்ச்சி குப்பம், 25 கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திறந்த உபநீர் பல விவசாய நிலங்களில் புகுந்துள்ளது. விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றனர்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஷட்டர் பழுதானது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்பே தெரியும். மழை காலத்துக்கு முன்பே பழுது பார்க்கவில்லை. உபரிநீர் இதனால் வெளியேற்ற முடியவில்லை. ஊருக்குள் வெள்ளநீர் புகும் சூழல் உருவாகியுள்ளது. விவசாயம் முற்றிலும் பாதிப்பு அடைய அரசின் மெத்தனப்போக்கு காரணமாக உள்ளது. போர்காலம் அடிப்படையில் சரி செய்ய உத்தரவிட வேண்டும். சித்தேரி அணை சுற்றி ஆகாயத் தாமரை, தேவையற்ற செடிகளை எடுக்கவில்லை. விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ அதிகாரிகள் செயல்பாடு இன்மைதான் காரணம் என்று குறிப்பிட்டனர்.
மேலும், மணப்பட்டு, காட்டுக்குப்பம், குருவிநத்தம் ஆகிய ஏரிகள் நிரம்பி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள குருவிநத்தம் சித்தேரி படுகை அணை, கொம்மந்தான்மேடு படுகை அணை மற்றும் கரையாம்புத்தூரை அடுத்த தமிழக பகுதியான சொர்ணாவூர் அணை நிரம்பி வழிகிறது. இந்த அணையில் இருந்து மதகு வழியாக 40 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் ஆற்றில் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்காரு வாய்க்கால் மதகு திறக்கப்பட்டுள்ளதால் சொர்ணாவூர் அணையில் இருந்து பாகூர் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்