அண்ணே இது புதுசா இருக்குனே புதுசா இருக்கு!! இதான் எங்க ஹெல்மெட்... கேஸ் போடுங்க பாப்போம் !
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் தலையில் வாணலை கவிழ்த்துக்கொண்டு ஹெல்மெட் போல சுற்றி வரும் வீடியோ வைரலாகியுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலான நிலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் தலையில் வாணலை கவிழ்த்துக்கொண்டு ஹெல்மெட் போல சுற்றி வரும் வீடியோ வைரலாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 12ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. மாநிலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக புதுச்சேரி- கடலூர் சாலை, புதுச்சேரி- விழுப்புரம் சாலை மற்றும் புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன விபத்தால் அதிக உயிரிழப்பு நடந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 14 லட்சம் வாகனங்கள் உள்ளன. அதில் 85சதவீதம் இருசக்கர வாகனங்கள் இருக்கிறது. இதில் இருசக்கர வாகன விபத்தில் கடந்த 2023ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024ம் ஆண்டு 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்தாண்டு சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 12ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் தலையில் சமையல் பாத்திரமான வாணலை கவிழ்த்துக்கொண்டு ஹெல்மெட் போல சுற்றி வரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

