ஆட்டோ டிரைவர் இப்படி செய்வார்னு எதிர்பாக்கல... அசந்து போன பெண் - அப்படி என்ன நடந்தது?
நேபாளத்தைச் சார்ந்த சுற்றுலாப் பயணி ஆட்டோவில் தவறவிட்ட ஆப்பில் செல்போனை சொந்த ஊருக்கு பேருந்தில் கிளம்பிய நிலையில் ஆட்டோவில் விரட்டி சென்று ஒப்படைக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஆட்டோவில் தவறவிட்ட விலையுயர்ந்த ஆப்பிள் செல்போனை, ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் புறப்பட்டுச் சென்ற பேருந்தை விரட்டி சென்று ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், ஆனால் சுற்றுலாவிற்கு வரும்போது அது மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கிறது. இந்தியாவின் இந்த சிறிய யூனியன் பிரதேசம், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் கட்டிடக்கலை மூலம் மயக்கும் வில்லாக்களைக் கொண்ட பழமையான பிரெஞ்சு காலனியாகும், மேலும் இது இந்தியாவின் பிரெஞ்சு தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள பாண்டிச்சேரி அழகிய கடற்கரைகளால் வரிசையாக உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக புதுச்சேரி என்றும் உள்நாட்டில் பாண்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கில கலாச்சாரங்களின் இணக்கமான கலவையாகும், அவை ஒவ்வொன்றின் அழகையும் மதிப்புகளையும் உள்வாங்குகிறது. இதனால் பல்வேறு நாடுகள், மாநிலகளில் இருந்து சுற்றுலாவிற்கு வருகின்றனர்.
ஐ போனை ஆட்டோவில் தவறவிட்ட நேபாள பெண்
புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்குள்ள ஓட்டுநர் சீனிவாசனின் ஆட்டோவில் வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தனது கையில் வைத்திருந்த ஆப்பிள் செல்போனை மறந்து ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், தனது ஆட்டோவின் பின்னிருக்கையில் ஆப்பிள் செல்போன் இருப்பதை எதார்த்தமாக கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன், உடனே அந்தப் பயணியை இறக்கிவிட்ட தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அந்தச் சுற்றுலா பயணி அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கும் விடுதியில் அவர் அளித்த செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு பேசிய ஆட்டோ ஓட்டுனர் சீனிவாசன், தனது ஆட்டோவில் ஆப்பிள் போனை விட்டுச் சென்ற விவரத்தை அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நேபால் பெண், தான் ஊருக்கு புறப்பட்டுவிட்டதாகவும் தான் பயணிக்கும் பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பேருந்தை நிறுத்தி நேபாள பெண்ணிடம் ஐ போனை வழங்கிய ஆட்டோ ஓட்டுனர்
இதையடுத்து ஆப்பிள் செல்போனை ஒப்படைக்க, தான் வந்து கொண்டிருப்பதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலருடன் சிவாஜி சிலை பகுதிக்குச் சென்ற சீனிவாசன், அந்த இடத்தில் நேபாள பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் அவரது செல்போனை ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் சீனிவாசனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.
ஆட்டோவில் தவறவிட்ட விலை உயர்ந்த ஆப்பிள் போனை திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் சீனிவாசனுடன் இணைந்து செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், எங்களுக்கு அந்த பெண்ணின் பெயர் கூட சரியாக தெரியவில்லை ஐ போனை ஒப்படைப்பதை மட்டுமே நாங்கள் பெரிதாக நினைத்தோம், அவரிடம் ஒப்படைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் . இந்த சம்பவங்களை வீடியோ எடுத்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அதை இணையத்தில் பதிவிட்டதையடுத்து, பலரும் ஆட்டோ ஓட்டுநர் சேவைக்கு பாராட்டுதெரிவித்து வருகின்றனர்.