Pongal 2025: இப்படியும் உண்டா...? ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
ஆண்கள் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைப்பார்கள்.
தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடம் உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை. காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாக கொண்டதாக இருக்கும்.
ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே, உழைப்பை போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வளவு ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் பண்டிகை.
ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார்மண்டம் கிராமத்தில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.
பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின் படையில் இடப்பட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.
இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகளும் மற்றும் தலைமுறைகள் தழைத்தோங்கவும் இவ்விதம் செய்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆண்டு தோறும் இந்த பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொங்கல் எப்போது வைக்க வேண்டும்?
பொதுவாக தைத் திருநாளானது உலகிற்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக திகழும் சூரிய பகவானை போற்றி கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைக்கத் தொடங்கி சூரியன் உதிக்கும்போது பொங்கல் பொங்குவது போல பார்த்துக் கொண்டால் கூடுதல் சிறப்பு ஆகும்.
அப்படி அந்த குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் வைக்க முடியாவிட்டால் கீழே குறிப்பிட்ட நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம். உத்தமம், லாபம், அமிர்தம் ஆகிய நல்ல நேரத்தில் பொங்கல் வைத்துவிடுவது நல்லது ஆகும்.
உத்தமம்:
உத்தம நேரம் காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறப்பு ஆகும்.
லாபம்:
லாப நேரத்தில் பொங்கல் வைப்பதும் நல்லது ஆகும். லாப நேரமானது காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
அமிர்தம் :
அமிர்த நேரமானது மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வருகிறது. முடிந்தவரை பொங்கலை மதியம் 12 மணிக்குள் வைத்து விடுவது நல்லது ஆகும். அப்படி வைக்க முடியாவிட்டால் இந்த அமிர்த நேரத்தில் வைப்பது நல்லது ஆகும்.
அதேபோல சூரிய ஓரை, சுக்கிர ஓரை மற்றும் குரு ஓரை நேரங்களில் பொங்கல் வைப்பது நல்லது ஆகும்.
சூரிய ஓரை:
காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை
சுக்கிர ஓரை:
காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை
குரு ஓரை:
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை
பொங்கல் பண்டிகை நாளில் முடிந்தவரை மதியம் 12 மணிக்குள் பொங்கல் வைத்துவிடுவது நல்லது ஆகும்.