விழுப்புரம் கொலை சம்பவம் - வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
கஞ்சா போதையில் சகோதரர்கள் இருவர் பல்பொருள் அங்காடியில் புகுந்து நபரை கத்தியால் குத்தி கொலை. வணிகர்கள் விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடையடைப்பு செய்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த இப்ராஹீம் விழுப்புரம் நகர பகுதியான எம்.ஜி.சாலையிலுள்ள பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாததால்வீட்டிலையே இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை நோன்பு கஞ்சி செய்வதற்கு பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹீம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றபோது அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததோடு அவரை திட்டி தாக்கினர். இதைபார்த்த இப்ராஹீம், அந்த இளைஞர்களிடம் சென்று ஏன் வீண் தகராறு செய்து பெண்ணை தாக்குகிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் இருவரும், இப்ராஹீமை தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால், அவரது வயிற்றில் குத்தினர். இதில் ரத்தம் வெள்ளத்தில் இப்ராஹீம் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் இப்ராஹீமை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் இப்ராஹீமை பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிடிபட்ட 2 இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை செய்ததில் இளைஞர்கள் இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராஜசேகர் (33), வல்லரசு (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர்களின் தந்தையான ஞானசேகரனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவரவே தனது தந்தையையும் அந்த பெண்னையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பெண்ணுடன் தனது தந்தை கள்ளத்தொடர்பில் இருந்து வந்தத நிலையில் எம் ஜி சாலை தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்னை கண்ட இருவரும் தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் பயத்தில் எம்ஜி சாலையிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். இதைப்பார்த்த அவர்கள் இருவரும் அந்த பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கிருந்த இப்ராஹீம் விரைந்து சென்று அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளைஞர்கள் இருவரும் இப்ராஹீமை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் இரு மூன்றுக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதியில் சண்டையிட்டு பென்னை தாக்க முற்பட்ட போது கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பட்டப்பகலில் பல்பொருள் அங்காடி ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைகளில் இளைஞர்கள் சண்டையிடும் சிசிடிவி காட்சிகள் மற்றும் கத்தியால் குத்துபட்டு அப்பாவி பல்பொருள் அங்காடி ஊழியர் சரிந்து விழும் காட்சிகள் உள்ளன. இந்தநிலையில் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விழுப்புரம் வணிக சங்க அமைப்பினர் இசம்பவத்தினை கண்டித்து விழுப்புரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இன்றைய தினம் மூடப்பட்டு கடையடைப்பு நடத்தப்படுமென அறிவித்தனர். அந்த அறிவிப்பின் படி நகர பகுதியில் இயங்ககூடிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். கடையடைப்பு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம் ஜி சாலை காமராஜர் வீதி, திருவிக வீதி, பாகர்ஷா வீதியிலுள்ள கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. கடையடைப்பு காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.