‘வாய்ப்பாடு சொல்லுங்க’ - பரிசு கொடுத்த அமைச்சர்....மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்..!
அமைச்சர் கணேசன் பள்ளி மாணவர்களிடம் மனப்பாடம் பகுதி வாய்பாடு கூற சொல்லி மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ம.பொடையூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை அருகே 30 கோடி மதிப்பிலான அமைய உள்ள ஆவின் குளிர்விக்கும் இடத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ராமநத்தம் பேருந்து நிலையத்தில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் டீ குடித்தார்.
இதனைத்தொடர்ந்து, ராமநத்தம் உயர்நிலை பள்ளி கட்டிடத்தின் மேற் கூறை சேதம் அடைந்து மழை நீர் கசிவு உள்ளதை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.வே. கணேசன், பள்ளி மாணவர்களிடம் மனப்பாடம் பகுதி வாய்பாடு கூற சொல்லி மாணவ,மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கினார்.
அதே வளாகத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்கள் தரையில் அமர்ந்து இருந்ததை கண்டு மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு அனைத்து மாணவ, மாணவிகள் பெஞ்சில் அமர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று கூறி தனது சொந்த நிதியில் இருந்து 33 பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்குவதாக உறுதியளித்தார்.
மேலும், சத்துணவு மையத்துக்கு சென்று சமையல் செய்த சத்துணவை ருசி பார்த்தார். அனைவருக்கும் முட்டை வழங்கப்படுகிறதா எத்தனை மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிடுகிறார்கள்? என சத்துணவு ஊழியரிடம் கேள்வி கேட்டு நல்ல தரமாகவும், சுத்தமாகவும் எப்போதும் சத்துணவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்