(Source: ECI/ABP News/ABP Majha)
மிக்ஜாம் புயல்: விழுப்புரம் நிவாரண முகாம்களில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பொன்முடி ஆய்வு
மிக்ஜாம் புயல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், வானூர் மற்றும் மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட கடற்கரையோரா பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர்.
அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதுடன், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெயிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச்செயலகத்திலிருந்து
காணொளி காட்சி வாயிலாக மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, தேவையான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கடற்கரையோர பகுதிகளான மரக்காணம் மற்றும் வானூர் வட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்துத்துறை அலுவலர்களும் இப்பகுதிகளில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மேலும், வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 நபர்கள் அடங்கிய ஒரு பேரிடர் மீட்புப்படை குழுவினரும், மரக்காணம் வட்டம், தெற்குகிராமம் ஜி.டி.எஸ் திருமண மண்டபத்தில் 25 நபர்கள் அடங்கிய ஒரு பேரிடர் மீட்புப்படை குழுவினர் தங்க வைக்கப்பட்டு, பேரிடர் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திடும் பொருட்டு, வானூர் வட்டத்தில் 03 மையங்களும், மரக்காணம் வட்டத்தில் 09 மையங்கள் என மொத்தம் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையங்களில் 9500 நபர்களை பாதுகாப்பாக தங்க வைத்திடலாம்.
அதனடிப்படையில், இன்றைய தினம், வானூர் வட்டத்திற்குட்பட்ட கடற்கரையோர கிராமப்பகுதிகளான தந்திராயன் குப்பம், சின்ன முதலியார்சாவடி ஆகிய பகுதிகளை பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்துகொடுக்கப்படும் எனவும், கனமழை பெய்யக்கூடும் என்பதால் அனைவரும் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பிட இருந்திட அறிவுறுத்தியதுடன், தங்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை வழங்கப்படம் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர், மரக்காணம் வட்டம், அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில், தாழ்வான பகுதியில் குடியிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 53 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், தங்கியுள்ளவர்களிடம் உணவு, பால், குடிநீர், பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர். மேலும், மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்தவுடன், மாவட்ட நிர்வாகம் அறிவித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிக்கு செல்லலாம் எனவும், அதுவரை முகாம்களில் பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
தற்பொழுது, மரக்காணத்தில் உள்ள 01 நிவாரண முகாமில் 53 நபர்களும், திண்டிவனத்தில் உள்ள 01 நிவாரண முகாமில் 22 நபர்கள் என மொத்தம் 75 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.