விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - ஹெலிகாப்டரிலிருந்து தூவப்பட்ட பூக்கள்
புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் 5 நந்தி, 5 கோபுரங்கள், 5 தீர்த்தம், 5 பிரகாரம், 5 தேர்கள் என அனைத்தும் 5ஆக அமையப்பெற்று உள்ளது தனிச்சிறப்பாகும். இந்தக் கோயிலில் கடந்த 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான விழா கடந்த 27ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி மணிமுத்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானை மீது வைத்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை என பல பூஜைகள் நடந்தன. நேற்றும் நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, 5 மணிக்கு பரிகார யாகங்கள், பூர்ணாகுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7.15 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த நிகழ்வின்போது மலர் தூவுவதற்கு ஹெலிகாப்டர் மற்றும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க நீர் தெளிக்கும் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதன்படி, கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், ஹெலிகாப்டரிலிருந்து பூக்கள் தூவப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. விழாவில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து குவிந்து இருந்தனர்.
கும்பாபிஷேகத்தின் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மேற்பார்வையில் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையில் சுமார் 1,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்