பெண்ணியத்தின் மீது ராகுல் காந்திக்கு அக்கறை இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் - புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்
பெண்ணினத்தின் மீது ராகுல் காந்திக்கு அக்கறை இருக்குமானால் தங்கள் கட்சி பெண் எம்.பி.யை அவமரியாதை செய்த, திமுக அமைச்சரைக் கண்டித்து, அக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளிவர வேண்டுமென புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி: பெண்ணினத்தின் மீது ராகுல் காந்திக்கு அக்கறை இருக்குமானால் தங்கள் கட்சி பெண் எம்.பி.யை அவமரியாதை செய்த, திமுக அமைச்சரைக் கண்டித்து, அக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளிவர வேண்டுமென புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய ஆண்கள், பெண்களை மனிதர்களாகக்கூட கருதவில்லை, இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி, திமுக அமைச்சரான செந்தில் பாலாஜியால் அவமரியாதை செய்யப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டார். தனது கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி.க்கு, திமுகவின் மாநில அமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட அவமரியாதையை கண்டிக்காத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒட்டுமொத்த மற்ற ஆண்களை பற்றி குறைத்து பேச எந்த உரிமையும் இல்லை.
உண்மையில் பெண்ணினத்தின் மீது ராகுல் காந்திக்கு அக்கறை இருக்குமானால் காங்கிரஸ் கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை அவமதித்த திமுகவைக் கண்டித்து, அக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிவர வேண்டும். தற்போது புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை தனியார் மயமாக்கல் செய்யப்படுவதக் கண்டித்து ஊழியர் சங்கங்கள் பல்வேறு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அரசு ஊழியர்கள் சம்மந்தபட்ட, அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசு மூலம் அதற்கு தீர்வு காண்பது என்பது தீர்வாக அமையும்.
ஆனால் பொதுமக்களைப் பற்றி கவலைப்படாமலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்திலும் மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை திமுகவும் - காங்கிரஸும் தூண்டி விடுவது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மின்துறை தனியார் மயமாக்கலை அதிமுக முழுமையாக எதிர்க்கிறது. அதேவேளையில் இந்தப் பிரச்சினையை முதல்வர் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து எப்போதும் போன்று மின் துறை அரசு துறையாக செயல்பட வழிவகை காண வேண்டும்.
இந்த பிரச்சினைக்கு மின் துறை ஊழியர் சங்கங்கள் ஒன்றுகூடி நீதிமன்றத்தின் மூலம் கூட தீர்வுகாணலாம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளை முதல்வரும், மின்துறை அமைச்சரும் அழைத்து பேசி புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை தடுத்து நிறுத்த உரிய வழிவகை காண வேண்டும்.'' இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்