விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக பல வருடங்களாக ஏரிக்கரையோரம் வசித்த இருளர்களுக்கு தொகுப்பு வீடு
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக பல வருடங்களாக ஏரிக்கரையோரம் வசித்த இருளர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் ஏரிக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக ஏரிக்கரை ஓரம் வாழ்ந்து வந்த இருளர்களுக்கு முதன்முறையாக தமிழக அரசாங்கம் மூலம் தொகுப்பு வீடுகள் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடநெற்குணம் ஊராட்சியில் சுமார் 37 இருளர் குடும்பங்கள் ஏரிக்கரையோரம் எந்த ஒரு அடிப்படை வசதிகளின்றி பல வருடங்களாக குடிசையில் வசித்து வந்தனர். மழையிலும், வெயிலிலும், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் பல்வேறு சிரமங்கள் மத்தியில் அங்கு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு அரசு நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.
பல ஆண்டுகளாக வைத்த அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்பொழுது 37 இருளர் குடும்பங்களுக்கு வடநெற்குணத்தில் வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் 31 வீடுகள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுடன் 100 மூட்டை சிமெண்ட், 320 கிலோ இரும்பு கம்பிகள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வீட்டு மனைப்பட்ட மற்றும் வீடும் கட்டி கொடுத்ததற்க்கு தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்தனர். குறிப்பாக இருளர் இன மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக தொகுப்பு வீடு வழங்கியது முதன்முறையாகும்.
இதுதொடர்பாக அங்கு வசிக்கும் இருளர் மக்கள் கூறுகையில், “நாங்கள் நீண்ட நாட்களாக ஏரிக்கரையோரம் விஷ ஜந்துகளுக்கு இடையே வாழ்ந்து வந்தோம், பல ஆண்டுகளாக போராடி அந்த நிலையில் தற்போது தான் தமிழக அரசு எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கி உள்ளது. நாங்கள் இத்தனை ஆண்டுகளாக ஏரிக்கையாகும் மழை வெயில் என சிரமப்பட்டு வந்தோம் தற்போது எங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக அரசு வழங்கியுள்ள தொகுப்பு வீட்டில் சந்தோஷமாக வசித்து வருவோம்” என கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்