(Source: ECI/ABP News/ABP Majha)
மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் - அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் 24 மத்திய அரசு பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இரண்டு கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலளை கண்டித்து ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக புதுச்சேரி போராட்டக் களமாக மாறி உள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பிராந்திகளிலும் மாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் புதுச்சேரி மாநிலமே இருளில் மூழ்கியது. இதனை கண்டித்து பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர். புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள். இந்த நிலையில் இது குறித்து விவாதிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது. இதில் தலைமை செயலர் ராஜு வர்மா, டி.ஜி.பி மனோஜ் குமார் லால், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர் மின்வெட்டு சம்பந்தமாக தலைமை செயலர் ,டிஜிபி மின்துறை செயலர், ஆகியோருடன் ஆலோசனை, விரைந்து மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு. pic.twitter.com/hH3lUMXT1y
— A.Namassivayam (@ANamassivayam) October 1, 2022
இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்...
மின்துறை ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அரசு கொள்கை முடிவாக எடுக்கப்பட்டு மின் துறை தனியார் மாயமாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற ஊழியர்கள் இன்று பாகூர், வில்லியனூர், தொண்டமாநத்தம், உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததோடு பீஸ் கேரியர்களையும் கையோடு கொண்டு சென்று உள்ளார்கள் இது சம்பந்தமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மக்களுக்கு இடையூறு செய்தால் அரசு இதை வேடிக்கை பார்க்காது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் மின் நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி போலீசார் மின் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுவார்கள், அதே போன்று தொடர்ந்து மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசு பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த 24 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள், அதேபோன்று மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனிகளும் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டக் காரர்களுக்கு சமூக அமைப்புகளோ சட்டமன்ற உறுப்பினர்களோ ஆதரவு தரக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்