(Source: Poll of Polls)
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குவால் 12 பேர் பாதிப்பு - ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குவால் 12 பேர் பாதிப்பு...மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்க ஆட்சியர் உத்தர்வு.
விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனையில், ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் தனி வார்டில், சிகிச்சை பெற்றுவருபவர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து வகை சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளன. தற்போது விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 டெங்கு உறுதி செய்யப்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்நோயளிகளாக உள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 டெங்கு உறுதி செய்யப்பட்ட நபர்கள் உள்நோயாளிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்பொழுது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் முன்னேற்பாடாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெரியவர்களுக்கான 45 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் குழந்தைகளுக்கான 35 படுக்கைகள் கொண்ட தனி வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் மரக்காணம் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டும் மற்றும் வட்டார அளவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கான வார்டில் கொசுவலைகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன. நிலவேம்பு கஷாயம், ORS எனப்படும் உப்பு கரைசல் நீர், அரிசி கஞ்சி ஆகியவை தினந்தோறும் வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலை தடுத்திடும் பொருட்டு கிராமங்களில், மூன்று நபர்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையின் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் டெங்கு காய்ச்சல் என கண்டறியப்படுவர்களுக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தேவையான மாத்திரைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள், இரத்தமும் அதன் பிரிக்கப்பட்ட பல்வேறு அணுக்களும், இரத்த வங்கியில் இருப்பில் உள்ளன.
டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்திடும் பொருட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் ஏஜிப்டி என்னும் ஒரு வகை கொசுவால் பரப்பப்படும் வைரஸ் காய்ச்சலாகும். இக்கொசுவானது பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய தன்மை கொண்டது. டெங்கு காய்ச்சலானது ஜுரம், தலைவலி நுரையீரலில் நீர் தேங்குவதால் ஏற்படும் மூச்சுத் தினறல், உடலின் பல பாகங்களில் இரத்த கசிவு ஏற்படுதல் மற்றும் சில சமயங்களில் முக்கிய உறுப்புகள் செயலிழத்தல் போன்றவை நோயாளிகளுக்கு தென்படலாம்.
எனவே, ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் தூய்மைப்பணியாளர்கள் கொண்டு தண்ணீர் தேங்காத வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கதாவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் பகுதிகளைச் சுற்றியுள்ள தண்ணீர் குடங்கள், தண்ணீர் டேங்க் போன்றவைகளை மூடி வைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், டயர், பிளாஸ்டிக் பாட்டில், கப்புகள், உரல்கள் போன்றவற்றில் நீர் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.