விழுப்புரம்: வீடூர் அணையில் இருந்து 2022 -23ம் ஆண்டு பாசனத்திற்காக நீர் திறப்பு
விழுப்புரம் : வீடூர் அணையில் இருந்து 2022 -2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கான நீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது. 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள், இன்று (01.02.2023) தண்ணீர் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வீடுர் அணை சுற்றுப்புற கிராம விவசாய நிலங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்கள் பயனடையும் இன்றைய தினம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தார்.
வராகநதி மற்றும் தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரிலிருந்தும், தொண்டூர் ஏரியிலிருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்ந்த பிறகு, அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரியின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீரோட்டம் பெறுகிறது. வீடூர் அணையின் மொத்த நீளம் 4,500 மீட்டர், நீர்மட்ட உயரம் 32 அடி மற்றும் முழு கொள்ளளவு 605 மில்லியன் கன அடிகள். வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்பொழுது வீடுர் அணையின் நீர்மட்டம் 31.675 அடி, 579 .575 மில்லியன் கன அடி நீர் சேகரிப்பில் உள்ளது.
ஒருபோக விவசாய பாசனத்திற்காக 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வீடூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது தமிழ்நாட்டின் பகுதியான வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேனி, ஐவேலி, நெமிலி, ஏறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் புதுச்சேரி பகுதியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று விவசாயிகள் இதன் மூலம் பயனடைவுள்ளனர். எனவே, விவசாய பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயம் செய்து நல்ல மகசூலை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.