6ஆவது நாளாக முட்டிபோட்டு போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்கள் - ஏன் தெரியுமா?
நேற்று 6-வது நாளாக இவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது தமிழக அரசிடம் தங்களது கோரிக்கையை முறையிடும் வகையில் கையில் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன், மண்டியிட்டு முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்து உள்ளது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவை கடந்த வருடம் ஜனவரி 27-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அந்த அரசாணையின் படி அவை அரசு மருத்துவ நிறுவனங்களாக கருதப்படுகின்றன. மேலும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக பெயர் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் மற்றும் மருத்துவர் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 8 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போன்று தங்களுக்கும் உதவி தொகையை வழங்கிட வேண்டும் எனவும், 8 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12ஆம் தேதி முதல் மருத்துவ பணிகளை புறக்கணித்து பயிற்சி மருத்துவகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவிலான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று 6-வது நாளாக இவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது தமிழக அரசிடம் தங்களது கோரிக்கையை முறையிடும் வகையில் கையில் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன், மண்டியிட்டு முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பயிற்சி மருத்துவர்களை தடுக்கும் வகையில் விடுதிகளை காலி செய்யவும் விடுதிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை கல்லூரி நிர்வாகம் நிறுத்தி உள்ளது ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் விடுதிகளை காலி செய்யவும் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவினை கல்லூரி நிர்வாகம் நிறுத்தி உள்ளதால் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் எங்கள் போராட்டம் தமிழக முதல்வர் செவிக்கு செல்லும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பயிற்சி மருத்துவகள் கலந்து கொண்டு உதவித்தொகை கேட்டு முழக்கங்களை எழுப்பினார்கள். இவர்களது தொடர் போராட்டம் காரணமாக, இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டமாக இருப்பதால், இவர்களது போராட்டத்துக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு கண்டு, அவர்களை பணிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.