தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்துள்ளது - சி.வி.சண்முகம்
குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை முடக்கவும் அச்சுறுத்தவும் உளவுத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - சிவி.சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்:
திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவு செய்ய உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழக முழுவதும் இன்றைக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை செயலிழந்துள்ளது. காவல்துறை கோமாவில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்து உள்ளது. திமுகவின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை முடக்கவும் அச்சுறுத்தவும் உளவுத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் உளவுப்பார்த்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது தமிழக முழுவதும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலை அதிகரித்துள்ளது. பீகார் உபி போன்ற மாநிலங்களில் நடைபெற்று வந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது சாதிய மோதல்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் உடைய மகன் மருமகள் வீட்டில் பட்டியலின பெண் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினுடைய அழுத்தத்திற்கு பிறகு இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.