Accident: உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து வாகனம் மோதல்; தாய், மகள் உயிரிழந்த சோகம்
சரக்கு லாரி திடீரென வேகத்தை குறைத்ததால் லாரியின் பின்னால் வந்த கார், தனியார் சொகுசு பேருந்து என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த சரக்கு லாரி திடீரென வேகத்தை குறைக்கப்பட்டதால் லாரியின் பின்னால் வந்த கார், தனியார் சொகுசு பேருந்து என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென வேகத்தை குறைத்ததால், பின்னால் வந்த திண்டுக்கல் பகுதியில் இருந்து சென்னைக்கு சென்ற கார் மோதியது. இதில் கார் லாரியின் பின்பக்கம் சிக்கிக்கொண்ட நிலையில் அதே நேரத்தில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் சொகுசு பேருந்தும் காரின் பின்பக்கம் மோதி சாலையின் இடது புறத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் சாய்ந்தது. இந்த கோர விபத்தில் கார் இடையில் சிக்கிக் கொண்டதால் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த திண்தாய் மற்றும் மகள் இரண்டு பேர் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த எடைக்கல் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.